சிலுக்குவார்பட்டி சிங்கம் – திரைப்பட விமர்சனம்
நான்கு பாடல்கள் அவற்றில் ஒன்றில் வேறொரு நாயகி ஆடவேண்டும், இரண்டு சண்டைக்காட்சிகள், படம் நெடுக நகைச்சுவை ஆகியனவற்றைச் சரிவிகிதத்தில் கலந்துகொடுத்தால் நிச்சயம் மக்களுக்குப் பிடிக்கும் என்று நம்பி இந்தப்படத்தை எடுத்திருக்கிறார்கள்.
அரசியல்வாதிகள் அமைச்சர்களுடன் தொடர்புடைய பெரிய ரவுடி ரவிஷங்கர். காவல்துறை ஆணையருக்கே தண்ணி காட்டும் அவர் சாதாரண காவலரான நாயகன் விஷ்ணுவிஷாலிடம் மாட்டிக்கொள்கிறார்.
ஒரு சாதாரண காவலர் தன்னைப் பிடிப்பதா என்கிற அவமானத்தில் விஷ்ணுவிஷாலுக்கு எதிராக அவர் செயல்பட தன்னிடமிருந்து தப்பியவனை பிடித்தாக வேண்டும் என்று தீவிரம் காட்டும் நாயகனுக்குமான போராட்டம்தான் கதை.
இதை நகைச்சுவை கலந்து கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு.
காவலர் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார் விஷ்ணுவிஷால்.உயர் அதிகாரிகளுக்கு சிற்றுண்டி வாங்கித் தருவது, தைரியமானவன் என்று சொல்லிக்கொள்வது கூடவே பார்க்கிற பெண்களிடமெல்லாம் வழிவது ஆகிய விசயங்களைச் சரியாகச் செய்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ரெஜினா கதைக்கேற்ப இருக்கிறார். கொஞ்சம் தாராளம் காட்டி ரசிக்க வைக்கிறார். ஒரு பாடல் ஒரு காட்சிக்கு மட்டும் வருகிற ஓவியாவும் குறை வைக்கவில்லை. மாரிமுத்து, நரேன், கருணாகரன், லிவிங்ஸ்டன், மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் ஆகியோர் அவரவர் வேலையைச் செய்திருக்கின்றனர்.
லியோ ஜேம்ஸின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. பின்னணி இசையிலும் குறைவில்லை.
சிங்கமுத்து, யோகி பாபு ஆகியோர் வருகிற நகைச்சுவைக்காட்சிகள் படத்துக்குப் பலமாக அமைந்திருக்கின்றன.படத்தின் நீளத்தைக் குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
நாயகன் விஷ்ணுவிஷாலின் முந்தைய படம் ராட்சசன். அந்தப்படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் இந்தப்படத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவருடைய தேர்வு சரிதான். ஆனால் அது முழுமையடையவில்லை என்பதுதான் சோகம்.











