ஆயிரம் கோடியில் அடுத்த படம் – ஷங்கர் நடத்திய இரகசிய சந்திப்பு
இயக்குநர் ஷங்கர் இப்போது, கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 மற்றும் ராம்சரண் நடிக்கும் தெலுங்குப்படம் ஆகியனவற்றை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
பாதிக்குமேல் வளர்ந்து நிற்கும் இவ்விரு படங்களின் பணிகளை முடிக்கவே ஓராண்டுக்கு மேல் ஆகிவிடும் என்று சொல்லப்படுகிறது.
இவைதவிர, இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் இந்திப் படமொன்றை ஷங்கர் இயக்குகிறார்.இந்தப் படம் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அந்நியன்’ படத்தின் மொழிமாற்று என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பென் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இன்னொரு படத்துக்கான வேலைகளில் ஷங்கர் ஈடுபட்டிருக்கிறார்,
பிரபல வார ஏட்டில் தொடராக வந்து பெரும் வரவேற்பைப் பெற்ற வேள்பாரி நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியில் ஷங்கர் இறங்கியிருக்கிறாராம்.
இதற்காக அந்நாவலாசிரியரும் தற்போது பாராளூமன்ற உறுப்பினராக இருப்பவருமான சு.வெங்கடேசனுடன் பல கட்ட ஆலோசனைகள் நடைபெற்றுள்ளது.
அதன்படி அந்நாவலை இரண்டுபாகங்களாகத் திரைப்படமாக்குவது என்று இறுதி செய்யப்பட்டிருக்கிறதாம்.
அதற்கான செலவுத்தொகை சுமார் ஆயிரம் கோடி என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அப்படத்தில் நாயகனாக யார் நடிப்பது என்பதை முடிவு செய்துவிட்டார்களாம்.
சிலநாட்களுக்கு முன்பு சென்னையில் இயக்குநர் ஷங்கர், சு.வெங்கடேசன் ஆகியோரை அந்த நாயகன் சந்தித்துப் பேசியிருக்கிறாராம். அவரே கதாநாயகனாகும் வாய்ப்பு இருக்கிறதென்கிறார்கள்.
இந்தியத்திரையுலகில் இதுவரை வந்த பிரமாண்டப்படங்களின் உச்சமாக இந்தப்படம் அமையும் என்று சொல்லப்படுகிறது.










