February 18, 2026
விமர்சனம்

சீதா பயணம் – திரைப்பட விமர்சனம்

அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகத்தில் ஏராளம் என்று அனபேசிவம் படத்தில் ஒரு வசனம் உண்டு.அதுதான் இந்தப் படத்தின் அடிநாதம்.

படத்தின் நாயகி ஐஸ்வர்யா,ஓரிடத்துக்குச் செல்லும் பயணத்தில் அவருக்குப் பல இடையூறுகள்.குறிப்பாக நாயகன் நிரஞ்சனாலும் இடையூறு.அதனால் போகுமிடத்துக்குச் சில விநாடிகள் தாமதமாகச் செல்கிறார்.அதனால் கொடும் விபத்திலிருந்து உயிர்தப்புகிறார்.எனவே,இடையூறு செய்தவர்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்.அப்போது நாயகனோடு காதல் மலர்கிறது.அதோடு சில சிக்கல்களும் வருகின்றன.அவை என்ன? அதனால் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் படம்.

நாயகியாக நடித்திருக்கும் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு நல்ல வேடம்.அன்பாலும் பாசத்தாலும் குளிர்ந்திருக்கும் அவர், தனக்குக் கிடைத்தவற்றை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள நினைக்கும் வேடம்.மகிழ்வும் நெகிழ்வுமான அந்த வேடத்துக்குத் தக்க நடித்து வரவேற்புப் பெறுகிறார்.

நாயகனாக நடித்திருக்கும் நிரஞ்சனும் நல்ல தேர்வு.துடிப்பும் துள்ளலுமாய் வருகிறார்.காதல் மலர்ந்த பின்பு உள்ளத்தில் ஏற்படும் நெருடல்களை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சத்யராஜ்,பிரகாஷ்ராஜ்,கோவை சரளா ஆகியோரின் வேடங்களும் அவற்றில் அவர்கள் நடிப்பும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.

அர்ஜூன் மற்றும் துருவ்சார்ஜா ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் கொஞ்சநேரம் வந்தாலும் தங்கள் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்துவிடுகிறார்கள்.

ஜி.பாலமுருகனின் ஒளிப்பதிவில் நிறைந்திருக்கும் நற்காட்சிகள், நாயகியோடு சேர்ந்து நாமும் பயணம் செய்த உணர்வைப் பெறச் செய்திருக்கிறது.

அனுப்ரூபன் இசையில் பாடல்களில் மென்மை. பின்னணி இசையும் காட்சிகளுக்கு இதம் சேர்க்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.

அயூப்கான் படத்தொகுப்பு திரைக்கதையோட்டத்தை நேர்த்தியாக்கியிருக்கிறது.

கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் நடிகர் அர்ஜுன்.

ஆக்சன்கிங் என்று பெயர் பெற்றாலும் அவருடைய படங்களில் காதல் உணர்வுகளும் பாடல்களும் இரசிக்கும்படி அமைந்திருக்கும்.இப்படத்தில் மெல்லிய உணர்வுகளான அன்பு,பாசம்,காதல் ஆகியனவற்றை அடிப்படையாக வைத்து திரைக்கதை எழுதியிருக்கிறார்.அவருடைய இரசிகர்களுக்காக அதிரடி சண்டைக்காட்சிகளில் அவரே தோன்றுகிறார்.

மகளுக்காக அவர் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் இந்தப்படம் அவர் எண்ணத்தை ஈடேற்றியிருப்பதோடு இரசிகர்களுக்கு மனம் மகிழ் உணர்வைக் கொடுக்கிறது.

– கதிர்

Related Posts