128 ஆவது நாளில் படம் ரிலீஸ் – எஸ்.ஜே.சூர்யா அதிரடி
அஜித் நடித்த வாலி படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய எஸ்.ஜே.சூர்யா ‘நியூ’ மூலம் கதாநாயகன் ஆனார். தன்னுள் இருந்த இயக்குநரை ஓரம்கட்டி, நடிகரை புதுப்பித்துக்கொண்டு வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.
மெர்சலில் விஜய்க்கு வில்லனாக மிரட்டியவர். இறைவி படத்தில் தன்னுள் இருந்த கலைஞனை வெளிக்கொண்டு வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
சமீபத்தில் ‘மான்ஸ்டர்’ என்று மாபெரும் வெற்றிப் படத்தில், குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் நாயகனாக நடித்திருந்தார். இவரது நடிப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது.
எஸ்.ஜே.சூர்யா என்றாலே ரொமான்ஸ் ஆன ஆள் என்ற பெயர் மாறி, நம்முள் உலவும் ஒரு சாதாரண மனிதனை அழகாக பிரதிபலித்திருந்தார்.மான்ஸ்டர் இவருக்கு ஜோடியாக பிரியாபவானி ஷங்கர் நடித்திருக்க,இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருந்தார். இப்படம் மே மாதம் வெளியாகி இந்த ஆண்டில் மிக நல்ல வசூலை ஈட்டியது.
தன் அடுத்த பயணத்தை இயக்குநர் ராதாமோகனுடன் ஆரம்பித்துள்ளார்.இயக்குநர் ராதாமோகன் இயக்கும் புதிய படத்தினை ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் (Angel studios MH LLP) சார்பில் தயாரித்து நடிக்கவிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
குடும்பங்கள் ரசிக்கும் பல தரமான வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் ராதா மோகன், முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக இந்தப் படத்தை இயக்கப் போகிறார்.
சமீபகாலமாக மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா, முதல் முறையாக இயக்குநர் ராதா மோகனுடன் இணைந்து இப்படத்திலும் ஒரு மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘கோமாளி’ ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘நேர்கொண்டபார்வை’ கலை இயக்குநர்,இப்படத்திற்கும் பணியாற்ற உள்ளார்.
இப்படத்தின் அலுவலக பூஜை இன்று நடைபெற்றது. சென்னையில் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப்படம் 2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று படம் வெளியாகும் என்று சொல்லியிருக்கிறார்கள்.











