அன்று டார்லிங் இன்று ரெபல் – ஞானவேல்ராஜா ஜி.வி.பிரகாஷ் வெற்றிக்கூட்டணி
ஜீ.வி.பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ரெபல். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் உடன் மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை உதயா கவனிக்க, படத் தொகுப்புப் பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டிருக்கிறார்.
உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
இந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக காணொளியில் இடம் பெறும் வசனங்களும், அதிரடிக் காட்சிகளும், ஜீ.வி.பிரகாஷ் குமாரின் ஆக்சன் அவதாரமும் இரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.
ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் கதையின் நாயகனாக நடித்து 2015 ஆம் ஆண்டு சனவரியில் பொங்கல்திருநாளையொட்டி வெளியான படம் டார்லிங். அப்போது மேலும் இரண்டு பெரிய படங்கள் வெளியாகின.அவற்றோடு போட்டியிட்டு பெரியவெற்றியைப் பெற்றது டார்லிங் படம்.
அப்படம் போலவே ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் கதையின் நாயகனாக நடித்துள்ள இந்தப்படமும் பெரியவெற்றி பெறும் என்று வியாபார வட்டத்தினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதனால் படக்குழு உற்சாகமடைந்துள்ளது.











