சினிமா செய்திகள் நடிகர்

சட்டத்தை மீறிய ரசிகர்கள் மன்னிப்பு கேட்ட ரஜினி

சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.சண்முகத்தின் தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் எம்ஜிஆர் சிலையை நடிகர் ரஜினிகாந்த் மார்ச் 5 ஆம் தேதி திறந்து வைத்தார்.

விழாவில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகர்கள் நாசர், பிரபு, விஜயகுமார், நடிகைகள் சரோஜா தேவி, சச்சு, லதா, அம்பிகா, இயக்குனர் பி.வாசு, தயாரிப்பாளர் தாணு, வி.ஜி.சந்தோசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மத்தியில் ரஜினி பேசியதாவது:

இது பல்கலைக்கழக விழா என்று நினைத்துக் கொண்டிருந்தால் இது கட்சி மாநாடு மாதிரி உள்ளது. இதை அரசியல் மேடை ஆக்கக்கூடாது என்று பார்த்தேன். ஆனால், நண்பர் ஏசிஎஸ் திரியைக் கிள்ளிவிட்டார்.

முதலில் நான் என் ரசிகர்களுக்கு வைக்கும் வேண்டுகோள். பேனர்கள், கட்- அவுட்களை பொதுமக்களுக்கு இடையூறா இருக்கும்படி வைக்க வேண்டாம் என்று சட்டம் உள்ளது. அதை நாம் கொஞ்சம் மீறி இருக்கிறோம். இனி அப்படிச் செய்ய வேண்டாம். அப்படி இடையூறு ஏற்பட்டிருந்தால் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க வேண்டாம் என்றார் ரஜினி.

ரஜினியின் வீட்டிலிருந்து விழா நடைபெறும் இடம்வரை ரஜினி பேனர்கள் இப்போதுள்ள கட்சிகளுக்குச் சற்றும் குறைவில்லாமல் பெருமளவில் வைக்கப்பட்டிருந்தன.

சட்டத்தை மீறி பேனர்கள் வைக்கப்பட்டன என்கிற ரஜினியின் ஒப்புதல் காரணமாக அவருடைய ரசிகர்கள் மீது சட்ட நடவடிக்கை வரலாம் என்று சொல்லப்படுகிறது.

Related Posts