அதர்ஸ் – திரைப்பட விமர்சனம்
மருத்துவத் துறையில் நடக்கும் மோசடிகளை அம்பலப்படுத்தும் வகையில் பல படங்கள் வந்திருக்கின்றன.அந்த வரிசையில் கவனிக்கத்தக்க இன்னொரு படமாக வந்திருக்கிறது அதர்ஸ்.
இரவு நேரத்தில் சாலையில் செல்லும் ஒரு மூடுந்து திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கப்படுகிறது.அதனால் அதில் பயணிப்போர் அனைவரும் தீயில் கருகி இறக்கின்றனர்.அது விபத்தன்று சதி என்பதை உணர்ந்து விசாரணையில் ஈடுபடுகிறார் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நாயகன் ஆதித்யா மாதவன்.அப்போது பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்.
ஒரு குழந்தைப்பேறு மருத்துவமனையில் மருத்துவராக இருக்கும் நாயகி கெளரி கிஷன், அங்கு நடக்கும் ஒரு பெரும் மோசடியை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறார்.அதனால் அவருக்குப் பெரும் சிக்கல்கள்.
இவ்விரண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் ஒருங்கிணைகிறது.அது என்ன? அவற்றின் விளைவுகள் என்னென்ன? என்பதைச் சொல்லியிருக்கும் படம் அதர்ஸ்.
நாயகனாக நடித்திருக்கும் ஆதித்யா மாதவன்,காவல்துறை அதிகாரிக்குரிய மிடுக்குடனும் துடிப்புடனும் இருக்கிறார்.காதல் காட்சிகளில் அதற்கேற்ற மென்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மருத்துவராக நடித்திருக்கும் நாயகி கெளரிகிஷனுக்கு, காதலியாக இருந்து அழகை வெளிப்படுத்தி இரசிகர்களைக் கவரும் வழக்கமான நாயகி வேடம் இல்லை.பெண்களின் ஆளுமையை வெளிப்படுத்தக் கூடிய நல்ல வேடம்.அதைப் பொறுப்பாகவும் சிறப்பாகவும் செய்திருக்கிறார்.
இன்னொரு காவலதிகாரியாக நடித்திருக்கும் அஞ்சுகுரியன் நிஜ அதிகாரி போல் நன்றாக நடித்திருக்கிறார்.முக்கிய வேடங்களில் நடித்திருக்கும்,மாலா பார்வதி, நண்டு ஜெகன், முண்டாசுப்பட்டி இராமதாசு,ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோரின் வேடங்களும் அவற்றில் அவர்களுடைய நடிப்பும் நன்று.
ஜிப்ரானின் பின்னணி இசையும் அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும் படத்தின் தன்மைக்கேற்ப ஒன்றுகொன்று இயைந்து செயலாற்றி படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறது.
இராமரின் படத்தொகுப்பு படத்தை வேகமாக நகர்த்திச் செல்கிறது.
அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியிருக்கிறார்.படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை படபடப்புடன் பார்க்கக் கூடிய ஒரு திகில் படத்தைக் கொடுத்திருக்கிறார்.அதில், சமுதாயத்துக்குத் தேவையான நல்ல கருத்துகளையும் கலந்து சொல்லி கவனிக்க வைத்திருக்கிறார்.
– வெற்றி











