தேசியவிருது நாசமாகிவிட்டது – இயக்குநர் அமீர் விமர்சனம்
71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் ஆகஸ்ட் 01 அன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த திரைப்படமாக ‘12 ஆவது ஃபெயில்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘பார்க்கிங்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்தப் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த உறுதுணை நடிகர் விருதும், இப்படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளொழுக்கு, கதல், பார்க்கிங் போன்ற பல படங்கள் விருது பெற்றுள்ளன. எம்.எஸ்.பாஸ்கர்,ஊர்வசி போன்றோருக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்திருக்கிறது.
அதேநேரம், அனிமல், ஹனுமான் போன்ற படங்கள் பொருட்படுத்தும் தகுதியில் இல்லாத இப்படங்கள் சில பிரிவுகளில் விருது பெற்றுள்ளன.
இவற்றைப்போல ஒரு மோசடியான படம் கேரளா ஸ்டோரி. இப்படத்தை இயக்கிய
சுதிப்தோ சென் சிறந்த இயக்குநர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இத்தேர்வு அப்பட்டமான சங்பரிவார் சார்பை வெளிப்படுத்துகிறது.
லவ் ஜிகாத்தால் பாதிக்கப்படுவதாக, கேரளாவைச் சேர்ந்த மூன்று பெண்கள் குறித்த தவறான சித்தரிப்புகளை வலதுசாரி எண்ணத்தோடு காட்டுகிற படம் இது. முஸ்லிம் இளைஞர்கள் இந்துப் பெண்களை மயக்கி (லவ் ஜிகாத்) இஸ்லாத்திற்கு மாற்றுவதாக இப்படம் காட்டுகிறது.
கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் ISIS அமைப்பில் சேர்க்கப்பட்டு சிரியா மற்றும் ஏமனுக்கு அனுப்பப்பட்டதாக தவறான தகவலைச் சித்தரிக்கிறது.
திரைப்படம் எனும் போர்வையில் வகுப்புவாதத்தை ஊக்குவிக்கிற, இந்திய மக்களிடையே மனப்பிளவை உருவாக்குகிற வகையில் அமைந்த இந்தப் படத்துக்கு சிறந்த இயக்கத்துக்கான விருது கொடுத்திருப்பது பலத்த எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கிறது.
கோடிக்கணக்கான மக்கள் பின்பற்றும் மதத்தையும் நாட்டின் ஒரு மாநிலத்தையும் பொய்யான தகவல்களின் அடிப்படையில் எதிரிகளாகச் சித்தரிக்கும் ஒரு படத்துக்கு சிறந்த இயக்குநர், ஒளிப்பதிவாளர் விருது அளித்திருக்கிறார்கள் என்று பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ளார் இயக்குநர் அமீர். அவர் தன்னுடைய பதிவில்,பாஜக ஆட்சியில் அமலாக்கத்துறை,தேர்தல் ஆணையம்,நீதிமன்றம்,தேசிய விருது உள்ளிட்ட எல்லாம் நாசமாகிவிட்டது என்று கூறியுள்ளார்.
தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது என்றதும் அதைக் கண்டித்து அறிக்கை விட்டார் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்.
ஆனால்,திரைத்துறையிலிருந்து யாரும் கருத்துச் சொல்லவில்லை.இப்போது இயக்குநர் அமீர் இதற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.











