கடைசி விவசாயி படத்துக்கு 2 தேசியவிருதுகள் – இயக்குநர் ம.மணிகண்டன் நன்றி
2021 ஆம் ஆண்டுக்கான 69 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. இயக்குநர் கேட்டன் மேத்தா தலைமையிலான 11 உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு தேசிய திரைப்பட விருதுக்கான ஆளுமைகளைத் தேர்வு செய்து பட்டியலை வெளியிட்டது.
அதில்,தெலுங்கில் வெளியான ‘புஷ்பா தி ரைஸ் (பார்ட் 1)’ படத்தில் நடித்த அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகைக்கான தேசிய விருது ‘கங்குபாய் கதியாவாடி’ படத்தில் நடித்த ஆலியா பட் மற்றும் ‘மிமி’ படத்தில் நடித்த கிருத்தி சனோன் ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இந்தியில் வெளியான ‘ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்’ படத்துக்கு சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
மராத்தி மொழியில் வெளியான ‘கோதாவரி’ திரைப்படத்தின் இயக்குநர் நிகில் மகாஜனுக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மிமி’ படத்தில் நடித்த பங்கஜ் திரிபாதி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும், ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தில் நடித்த பல்லவி சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளனர்.
விவேக் ரஞ்ஜன் அக்னிகோத்ரி இயக்கிய ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கிஸ் தத் விருது பெறுகிறது.
‘ஆர்ஆர்ஆர்’ பன்மொழிப் பிரிவில் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமாகத் தேர்வாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் ‘நாட்டு நாட்டு’பாடலைப் பாடிய கால பைரவா சிறந்த பின்னணிப்பாடகருக்கான தேசிய விருதையும், ஷ்ரேயா கோஷல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதையும் பெற்றுள்ளனர்.
சிறந்த இந்திப் படங்களுக்கான வரிசையில், கங்குபாய் கதியாவாடி மற்றும் சர்தார் உத்தம் ஆகிய படங்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த திரைக்கதைக்கான பிரிவில் ‘கங்குபாய் கதியாவாடி’ படத்துக்கு விருது கிடைத்துள்ளது. ஷெர்ஷாவுக்கு சிறப்பு ஜூரிக்கான விருது கிடைத்துள்ளது.
சிறந்த தமிழ்ப் படத்துக்கான பிரிவில் ம.மணிகண்டன் இயக்கிய ‘கடைசி விவசாயி’க்கும், தெலுங்கில் ‘உபென்னா’வுக்கும், கன்னடத்தில் ‘777 சார்லி’க்கும், மலையாளத்தில் ‘ஹோம்’ திரைப்படத்துக்கும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடைசி விவசாயி படத்திற்குத் தேசிய விருது கிடைத்ததை ஒட்டி அதன் இயக்குநர் ம.மணிகண்டன் வெளியிட்டுள்ள நன்றிக் கடிதம்…..
அனைவருக்கும் அன்பான வணக்கம்.
மக்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட கடைசி விவசாயி திரைப்படத்திற்கு மிகப்பெரும் அங்கீகாரமாக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரைபல் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான “கடைசி விவசாயி” படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைக்கக் காரணமாக இருந்த விருதுத் தேர்வுக் குழுவினருக்கும், இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும், மூத்த பத்திரிகையாளர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், இணையதள ஊடகங்களுக்கும் இந்நேரத்தில் என் சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடைசி விவசாயி படத்தினில், முதிய வயதிலும் சோர்வின்றி நடித்து, அக்கதாப்பாத்திரத்தை உயிர்ப்பித்து, கொண்டாட வைத்த மறைந்த அய்யா நல்லாண்டி அவர்களுக்கும், இப்படத்தினை உருவாக்க மிகபெரும் ஒத்துழைப்பைத் தந்த ஊர்மக்களுக்கும், இப்படத்தினை உலகம் முழுதும் கொண்டு சேர்த்த விஜய்சேதுபதி புரொடக்சன் (Vijaysethupathi Production) மற்றும் 7 சிஎஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் (7cs Entertaiments) நிறுவனங்களுக்கும், இந்தப் படத்தினை உருவாக்க உறுதுணையாகவும் இருந்து, சிறப்பாக நடித்தும் கொடுத்த மக்கள் செல்வன் திரு.விஜய் சேதுபதி அவர்களுக்கும், சக தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தேசிய விருதுக்காக மனதாரப் பாராட்டிய மக்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 69 ஆவது தேசிய விருதுகளில், தமிழ் மொழிக்கு, கடைசி விவசாயி படம் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இது போல படைப்புகளை உருவாக்க, இந்த விருது மிகப்பெரிய ஊக்கம் தந்துள்ளது. மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
ம.மணிகண்டன்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.











