சினிமா செய்திகள்

லிஃப்ட் பட சிக்கல் என்னவானது? நடந்தது என்ன? – முழுவிவரம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகர் கவின் நாயகனாக நடித்திருக்கும் படம்’லிப்ட்’. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இந்தப் படத்தை வினீத் வரப்பிரசாத் இயக்கி உள்ளார்.

ஈகா எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது.

செப்டம்பர் 13 அன்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளீயிட்டுள்ள அறிக்கையில்….

ஈகா எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனத்தின் தமிழ்த் திரைப்படமான லிஃப்ட் இன் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை மட்டும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடம் கடந்த ஏப்ரல் 2021 இல் ஒப்பந்தம் போடப்பட்டது.

இதையடுத்து ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி ரவீந்தர் சந்திரசேகரன் நடந்து கொள்ளாததால் எங்கள் ஏகா எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனத்துக்கும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்குமான ஒப்பந்தம் முறித்துக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து ஏகா எண்டர்டெயிண்ட்மென்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ நபரான திரு.திலீப்குமார் சென்னை காவல் ஆணையரிடம் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனிடம் லிஃப்ட் தமிழ்த்திரைப்படம் சம்பந்தமான எந்த ஒரு காப்புரிமமும் இல்லை. எனவே தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனிடம் லிஃப்ட் தமிழ்த் திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு வியாபாரத்திற்காக எந்த ஒரு நிறுவனமும் தொடர்புகொள்ள வேண்டாம் என இதன்மூலம் கேட்டுக்கொள்கிறோம்.

லிஃப்ட் தமிழ்த்திரைப்படத்தின் அனைத்து அதிகாரப்பூர்வ செய்திகளும் ஏகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தினால் மட்டுமே தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

ஈகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிஃப்ட் திரைப்படத்தின் தமிழ்நாடு உரிமையை எனது லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்தது.

ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளது போல் ஐம்பது விழுக்காடு முன்பணம் செலுத்தியுள்ளோம்.மீதி ஐம்பது விழுக்காடு தொகை படத்தின் வெளியீட்டிற்கு முன் செலுத்தவேண்டும் என ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் தியேட்டர்கள் திறந்தவுடன் அக்டோபரில் படத்தைத் தியேட்டரில் வெளீயிடலாம் என முடிவு செய்து கடந்த ஒரு மாதமாக தயாரிப்பாளரைத் தொடர்பு கொள்ள முயன்று வருகிறோம்.ஆனால் அவர் எங்கள் அழைப்புகளை எடுப்பதில்லை. இது தொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளோம்.சங்கத்தில் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதும் லிஃப்ட் பட தயாரிப்பாளர் எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

தற்போது லிஃப்ட் பட தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் உடன் செய்த ஒப்பந்தம் முறித்துக்கொள்ளப்பட்டது என தானாகவே ஒரு வேடிக்கை அறிக்கையை வெளீயிட்டுள்ளார்.

லிஃப்ட் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடம் தான் உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஈகா நிறுவனத்தின் அறிக்கை அதற்கு லிப்ரா நிறுவனத்தின் பதில் அறிக்கை என்கிற பரபரப்பு அதோடு காணாமல் போனது.

இப்போது அக்டோபர் 1 அன்று இப்படம் நேரடியாக இணையத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்தச் சிக்கல் என்னவானது?

இதுதொடர்பாக இரண்டு தயாரிப்பாளர்களிடமும் கேட்டபோது, எல்லாச் சிக்கல்களும் சுமுகமாகப் பேசித் தீர்க்கப்பட்டுவிட்டன என்று சொன்னார்கள்.

என்ன நடந்தது?

இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை சுமார் ஒன்றரை கோடிக்கு லிப்ரா நிறுவனம் பெற்றிருந்ததாகச் சொல்லப்பட்டது.பேசிய தொகையில் பாதியை முன் பணமாகவும் கொடுத்துவிட்டதாம் லிப்ரா நிறுவனம்.

அதன்பின், இப்படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிடுவதற்காக இணைய நிறுவனம் சுமார் மூன்றரை கோடி கொடுக்க முன் வந்தபோது, லிப்ரா நிறுவனத்துடன் போட்டிருந்த ஒப்பந்தம் குறுக்கே நின்றதாம். அதனால் அந்த ஒப்பந்தத்தை இரத்து செய்ய ஈகா நிறுவனம் கேட்டபோது லிப்ரா நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லையாம்.

அதனால், காவல்துறையில் புகார், திரைத்துறை சங்கங்களில் பஞ்சாயத்து என்று சிக்கல் ஏற்பட்டது. அதன்பின் நடந்த பேச்சுவார்த்தை முடிவில், லிப்ரா நிறுவனம் விலகிக் கொண்டதாம். அவர்கள் கொடுத்திருந்த முன் பணத்தை ஈகா நிறுவனம் திருப்பிக்கொடுத்துவிட்டதாம்.

இப்படியாக இந்தச் சிக்கல் முடிவடைந்து படம் நேரடியாக இணையத்தில் வெளியாகவிருக்கிறது.

Related Posts