February 10, 2026
விமர்சனம்

லைசென்ஸ் – திரைப்பட விமர்சனம்

ஒரு பள்ளி ஆசிரியை, தனக்கு துப்பாக்கி வேண்டுமெனக் கேட்கிறார். காவல்துறை மறுக்கிறது.அதனால் நீதிமன்றம் செல்கிறார். அங்கு என்ன நடக்கிறது? அவர் ஏன் துப்பாக்கி கேட்கிறார் ஆகிய கேள்விகளுக்கான விடையாக விரிந்திருக்கும் படம் லைசென்ஸ்.

ஏஏஏ சின்ன மச்சான் உள்ளிட்ட பல பாடல்கள் மூலம் நம் செவிகளுக்குள் நிறைந்த பாடகி ராஜலட்சுமி இந்தப்படத்தில் நாயகியாக நடித்து நம் கண்களுக்குள் நுழைந்திருக்கிறார்.அவருடைய முடியலங்காரமும் மிடுக்கான நடையும் தீர்க்கமான பார்வையும் அவர் ஏற்றிருக்கும் வேடத்துக்குப் பலமாக அமைந்திருக்கின்றன. நடிப்பில் இன்னும் முன்னேற வேண்டும்.

நாயகியின் தந்தை வேடத்தில் நடித்திருக்கும் ராதாரவியின் வேடம் திரைக்கதைப் பயணத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது. அவ்வளவு முக்கியமான வேடத்தை தன் நடிப்பின் மூலம் மெருகேற்றியிருக்கிறார் அவர்.

சிறுவயது ராஜலட்சுமியாக நடித்திருக்கும் அபிநட்சத்திரா அருமை. நீதிபதியாக வரும் கீதாகைலாசம், பழ.கருப்பையா, நமோநாராயணன், வையாபுரி ஆகியோரும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

காசிவிஸ்வநாதனின் ஒளிப்பதிவு, கதாபாத்திரங்கள் தவறவிட்டவற்றை சமன் செய்து காட்சிகளை முழுமையாக்கியிருக்கிறது.

பைஜுஜேக்கப்பின் இசை இயல்பாக அமைந்திருப்பது படத்தின் இலகுவான நகர்வுக்கு உதவியிருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் கணபதி பாலமுருகன். நாயகியின் கதாபாத்திரத்துக்குப் பாரதி என்று பெயர் சூட்டியது, ஒரு பெண் ஆசிரியர் துப்பாக்கி கேட்பாரா? என்கிற கேள்வி வராமலிருக்க அவருடைய அப்பாவை காவல் அதிகாரியாக்கியது, அவருடைய தவறுகளே நாயகிக்குப் பாடமாக அமையும்படி செய்தது ஆகியன உட்பட பல விசயங்களில் தன்னுடைய தனித்தன்மையை நிறுவியிருக்கிறார்.

உரிமம் கொடுக்கலாம்.

– தனா

Related Posts