லியோ சிறப்புக்காட்சி அனுமதி – என்ன நடக்கிறது?
லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் விஜய்,த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது அதிகாலையில் சிறப்புக்காட்சிகள் திரையிடப்படுவது வழக்கம்.
அக்காட்சிகளுக்கு மிக அதிக அளவில் விலை வைத்து நுழைவுச்சீட்டுகள் விற்பது மற்றும் சட்டம் ஒழுங்குச் சிக்கல்கள் ஆகியனவற்றால் அதிகாலைக் காட்சிகளுக்கு அனுமதி தருவதில்லை என்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருக்கிறது.
கடைசியாக, இவ்வாண்டு தொடக்கத்தில் பொங்கல்நாளில் வெளியான வாரிசு,துணிவு ஆகிய படங்களுக்கு அதிகாலைக் காட்சி இருந்தது.
அதன்பின் வெளியான கமல்,ரஜினி உள்ளிட்டோர் படங்கள் உட்பட எல்லாப் பெரிய படங்களுக்கும் அதிகாலைக் காட்சிக்கு அனுமதி தரவில்லை.
இந்நிலையில், லியோ படத்தை அக்டோபர் 18 ஆம் தேதி மாலை மற்றும் இரவுக்காட்சியை சிறப்புக்காட்சி என்று சொல்லி அதிகவிலை வைத்து நுழைவுச் சீட்டு விற்பனை செய்யலாம் என்று திட்டமிட்டதாகத் தெரிகிறது.
சென்னையில் இயங்கிவரும் கமலா திரையரங்கத்தின் சமூகவலைதளப் பக்கத்தில் இந்தத் தகவல் வெளியானது.
நீங்கள் திட்டமிட்டபடி, நுழைவுச் சீட்டுகளுக்கு ஆயிரம், ஐநூறு என்று கட்டணம் நிர்ணயம் செய்வதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லிவிட்டார்களாம்.
ஆனாலும் விடாமல், அக்டோபர் 19 ஆம் தேதி காலை ஏழுமணிக்கே காட்சிகளைத் தொடங்க அனுமதியுங்கள் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்களாம்.முதல்நாளில் ஆறு காட்சிகள் திரையிட்டுவிடத் திட்டமிட்டு இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறதாம்.
சிறப்புக்காட்சி மற்றும் அதிகக் காட்சிகளுக்காகப் படக்குழு இவ்வளவு போராடக் காரணம் இருக்கிறது.
விஜய் படத்தின் தமிழ்நாடு திரையரங்க வியாபாரம் முதன்முறையாக நூறுகோடியைத் தொட்டுவிட்டது என்று சொல்வதற்காகவே ஒவ்வொரு பகுதிக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை நடந்திருக்கிறது.
அதனால், ஒவ்வொரு பகுதியிலும் முந்தைய விஜய் படங்களைவிட அதிக விலை கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்கியிருக்கிறார்கள். அவ்வளவு பணத்தைத் திருப்பி எடுத்தாக வேண்டும் என்பதால் முதல்நாளில் சிறப்புக்காட்சிகள் திரையிட்டு ஒன்றுக்கு ஐந்தாய் நுழைவுச் சீட்டுக் கட்டணம் நிர்ணயம் செய்யவேண்டும் என்று துடிக்கிறார்களாம்.
இது தயாரிப்பு மற்றும் விநியோகத் தரப்பின் சிக்கல்.
விஜய்யைப் பொறுத்தவரை சிறப்புக்காட்சிக்கு அனுமதி கொடுத்தால் சத்தமில்லாமல் பணம் வசூல் செய்வது, அனுமதி மறுக்கப்பட்டால் அரசு எங்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்று விமர்சனம் செய்வது என்று இருக்கிறாராம்.
சிறப்பு.











