லோகேஷ்கனகராஜ் கேட்ட தொகை அதிர்ந்த தயாரிப்பாளர் – லியோ பரபரப்பு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தது. அதன்பிறகு சென்னையில் உள்ள அரங்கம் ஒன்றில் மொத்தப் படப்பிடிப்பும் நடந்தது.
அண்மையில் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்தாக படக்குழு அறிவித்தது.படப்பிடிப்புக்குப் பிறகான வேலைகள் வேகமாக நடந்துவந்தன.
இந்த நிலையில், முதற்கட்டப் படப்பிடிப்பின்போது சில காட்சிகள் விடுபட்டிருப்பது படத்தைத் தொகுக்கும்போது தெரியவந்திருக்கிறது.
அதனால், மீண்டும் அங்கே சென்று படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று லோகேஷ்கனகராஜ் சொல்லியிருக்கிறார். இந்தப் படப்பிடிப்பில் விஜய் தேவையில்லை என்றும் அவரைப் போன்ற போலியை வைத்து சில காட்சிகளைப் படமாக்கிக் கொள்ளலாம் என்றும் சொல்லியிருக்கிறார். தயாரிப்புத் தரப்பும் அதை ஏற்றுக்கொண்டதாம்.
இதனால், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் மீண்டும் காஷ்மீர் சென்றுள்ளனர். இந்தப் படப்பிடிப்பு 10 நாட்கள் நடைபெற உள்ளதாம்.
விசயம் இதுவன்று. இந்தப்படப்பிடிப்புக்கு ஆகும் செலவு என்று லோகேஷ்கனகராஜ் தரப்பு சொன்ன தொகை சுமார் ஆறு கோடியாம். நடிகர்கள் இன்றி விடுபட்ட காட்சிகளைப் படமாக்க இவ்வளவு செலவு என்றால் விடுபட்டதை எடுக்கிறார்களா? எடுத்த காட்சிகளைத் திரும்ப எடுக்கிறார்களா? அல்லது புதிதாக யோசித்து எடுக்கிறார்களா? என்று புரியாமல் புலம்பியபடி செலவு செய்து கொண்டிருக்கிறார்களாம்.











