September 23, 2023
சினிமா செய்திகள்

விஜய் 68 படத்தில் இணைந்தார் அரவிந்தசாமி

அக்டோபர் 19 ஆம் தேதி, லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் வெளியாகவிருக்கிறது.

அதைத்தொடர்ந்து,வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

விஜய் 68 என்றழைக்கப்படும் அந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.

இந்தப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அம்மூன்று வேடங்களில் இரண்டு வேடங்களுக்கு இணையர் உண்டாம். ஒரு வேடம் தனியாகவே வருமாம்.

விஜய்க்கு இணையர் வேடங்களில் நடிகை சினேகா மற்றும் பிரியங்காமோகன் ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள்.

இவர்களோடு படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று முதன்மை வேடங்களில் மூன்று கதாநாயகர்கள் நடிக்கிறார்கள்.

பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரே அம்மூன்று கதாநாயகர்கள்.

வேடத்தின் முக்கியத்துவம் மற்றும் பெரிய சம்பளம் என்பதால் மூவரும் நடிக்க ஒப்புக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில இன்னொரு முக்கிய நடிகரும் இணைந்திருக்கிறாராம். அவர் நடிகர் அரவிந்தசாமி.

இந்தப்படத்தில் வில்லனாக கிரிக்கெட் வீரர் தோனி நடிக்கிறார், இந்தி நடிகர் அமீர்கான் நடிக்கிறார், இவர்களெல்லாம் இல்லை எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.

இந்த நேரத்தில் அரவிந்தசாமி இந்தப்படத்தில் இணைந்திருக்கிறார் எனும்போது அவர்தான் வில்லனாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது.

அக்டோபர் இரண்டாம்தேதி இவையெல்லாம் உறுதியாகிவிடும்.

அன்றைய தினம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம். அப்போது, படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரை அறிவித்துவிடுவார்கள்.

அன்று தொடங்கும் படப்பிடிப்பில் பாடல் காட்சியொன்றைப் படமாக்கவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

Related Posts