லால் சலாம் சிக்கல் – தவிக்கும் ரஜினி
ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜீவிதா, ரஜினியின் தங்கையாக நடிக்கிறார். செந்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
இப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ எனும் பெயர் கொண்ட இஸ்லாமிய கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இந்தப்படத்தின் செலவுத் தொகை அதிகரித்தது குறித்த சிக்கல் உருவாகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்தப்படத்துக்கு, ரஜினிகாந்த் சம்பளம் இல்லாமல் சுமார் இருபத்தைந்து கோடி செலவு எனத் திட்டமிட்டுள்ளனர்.படத்தின் வியாபாரத்தில் வரும் தொகையில் குறிப்பிடத்தகுந்த பங்கை ரஜினிக்குக் கொடுப்பதாக லைகா நிறுவனம் சொல்லியிருந்ததாம்.
இப்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையிலேயே அப்படத்தின் செலவு சுமார் நாற்பது கோடியைத் தாண்டிவிட்டதாம். இன்னும் செய்ய வேண்டிய செலவுகளைக் கணக்கிட்டால் சுமார் நாற்பத்தைந்து கோடி மொத்தச் செலவு என்கிற இடத்தில் போய் நிற்கும் என்று சொல்கிறார்கள்.
இந்தப்படத்தை ஐஸ்வர்யாரஜினிக்குக் கொடுக்கப் பரிந்துரைத்து தானும் அதில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறேன் என்று சொல்லிப் படம் உருவாகக் காரணமாக இருந்தவர் ரஜினிகாந்த்.இப்போது, திட்டமிட்டதைவிடப் பன்மடங்கு அதிகச் செலவாகிவிட்டதால், தன்னுடைய சம்பளத்தில் கைவைத்துவிடுவார்களோ என்கிற அச்சம் ரஜினிகாந்த்துக்கு ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதனால்,வியாபாரத்தில் பங்கு என்பதை விட்டுவிட்டு, ஒரு குறிப்பிட்ட தொகையைச் சொல்லி இதை எனக்குக் கொடுத்துவிடுங்கள் என்று ரஜினி கேட்டுக்கொண்டாராம்.
ஆனால், லைகா தரப்பில் அதற்கு பதில் எதுவும் சொல்லப்படவில்லை என்று தெரிகிறது.தான் விடுத்த கோரிக்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டார்களா? அல்லது மறுத்துவிட்டார்களா? என்பது தெரியாமல் ரஜினி தவித்துவருகிறாராம்.
மகள் இயக்கியிருக்கும் படம் என்பதால் அதிரடியாக எந்த முடிவும் எடுக்கவியலாது எனும் கையறு நிலையில் ரஜினி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
எப்படியாவது ஒரு முடிவை எட்டித்தான் ஆகவேண்டும், அது என்ன? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.











