மீண்டும் தொடங்கும் கவின் படம் – நடந்தது என்ன?
நடிகர் கவின் இப்போது வெற்றிமாறன் தயாரிப்பில் புதுஇயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கும் மாஸ்க் மற்றும் லோகேஷ் கனகராஜின் உதவியாளரும் பாடலாசிரியராக அறியப்பட்டவருமான விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளிலும் மாறி மாறி கலந்து கொண்டிருந்தார்.இவற்றில் மாஸ்க் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே நிறைவடையும் நிலையில் இருந்தது.பெருமழை காரணமாகப் படப்பிடிப்பு தடைபட்டது.அதனால் இன்னும் ஒரு வாரம் முதல் பத்துநாட்கள் வரை அப்படத்தின் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறது.அதுவும் விரைவில் தொடங்கி நிறைவடைந்துவிடும் என்று சொல்கிறார்கள்.
இன்னொரு பக்கம் விஷ்ணுஎடவன் இயக்கும் படத்தின் வேலைகள் திட்டமிட்டபடி நடந்து கொண்டிருக்கிறதாம்.
இவ்விரு படங்களுக்கும் முன்பாகவே நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் கிஸ் என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் கவின்.அப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டு சுமார் ஓராண்டாகியிருக்கிறது.
அப்படத்துக்கு இசையமைக்கும் அனிருத் பாடல்கள் தராததால் படப்பிடிப்பு தடைபட்டது.அனிருத் வரிசையாகப் படங்கள் வைத்திருப்பதால் இந்தப்படத்துக்குப் பாடல் தருவதில் தாமதம் செய்கிறார் என்று சொல்லப்பட்டது.
ஆனால் உண்மை வேறு.
இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட நேரத்தில் கவின் வாங்கிய சம்பளம் குறைவு.அதாவது சுமார் இரண்டு கோடிக்கும் குறைவாகத்தான் இப்படத்துக்கு சம்பளம் என்று சொல்லப்படுகிறது.
அதன்பின் கவினின் சந்தைமதிப்பு உயர்ந்திருக்கிறது என்பதால் இப்போது நான் வாங்கும் சம்பளத்தைவிட இந்தப்பட சம்பளம் மிகவும் குறைவு எனவே இப்போதைய மதிப்புக்கேற்ப சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க வேண்டும் அப்படிக் கொடுத்தால்தான் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
அப்படத்தின் தயாரிப்பாளர் ரோமியோ பிக்சர்ஸ் இராகுலோ, ஒப்புக்கொண்ட சம்பளத்தை வாங்கிக் கொண்டு நடிப்பதானால் நடியுங்கள் இல்லையென்றால் படம் அப்படியே கிடக்கட்டும் என்று சொல்லிப் போட்டு வைத்துவிட்டாராம்.இதனால் பல மாதங்கள் எந்த வேலையும் நடக்காமல் இருந்தது.
இப்போது இந்தப்படத்தின் வேலைகள் மீண்டும் தொடங்கியிருக்கிறது என்கிறார்கள்.
என்ன நடந்தது?
தீபாவளியன்று வெளியான ப்ளடி பெக்கர் படத்தை மிகவும் எதிர்பார்த்திருந்தாராம் கவின்.அந்தப் படம் பெரிய வெற்றியடையும் நம் மதிப்பு இன்னும் பன்மடங்கு உயரும் என்று நம்பிக் கொண்டிருந்தாராம்.ஆனால் முடிவு நேர்மாறாக அமைந்துவிட்டது.அதனால் தடுமாறிப்போன அவர் சதீஷ் இயக்கும் படத்தை ஒப்புக்கொண்ட சம்பளத்திலேயே முடித்துக் கொடுக்க முன் வந்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
இப்போது, அப்பட அலுவலகத்துக்கே வந்து இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை இயக்குநருடன் அமர்ந்து பார்த்து இன்னும் எடுக்க வேண்டிய காட்சிகள் குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
விரைவில் அப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கவிருக்கிறது.
இதன் காரணமாக், இன்னும் சில வாரங்களில் கவின் நடிக்கும் கிஸ்,மாஸ்க்,விஷ்ணுஎடவன் படம் ஆகிய மூன்று படங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.











