விமர்சனம்

கள்ளன் – திரைப்பட விமர்சனம்

சிரமறுத்தல் வேந்தர்க்குப் பொழுதுபோக்கும் சிறியகதை நமக்கெல்லாம் உயிரின் வாதை என்றார் பாவேந்தர்.அதை மெய்ப்பிக்கும் விதமாக இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்ந்த மக்களை பல்வேறு காரணங்களை முன்வைத்து அதிலிருந்து பிரித்தெடுத்து பிழைப்புக்காக அலைய விடுகின்றன அரசாங்கங்கள். 

அப்படித்தான், காலங்காலமாக உணவுக்காக மட்டுமே வேட்டையாடி வாழ்க்கை நடத்தி வந்த வேட்டைச்சமூகத்தை, திடீரென் ஒருநாள் இனிமேல் வேட்டையாடுவது குற்றம் எனச் சொல்கிறது அரசாங்கம். 

அதன்பின் அம்மக்கள் வாழ்க்கை என்னாகிறது? என்பதை உணர்வுப்பூர்வமாக விளக்கியிருக்கிறது கள்ளன்.

கதையின் நாயகனாக வரும் கருபழனியப்பன், வேடத்துக்கேற்ப தன்னை வடிவமைத்துக்கொள்ள முயன்றிருக்கிறார். சில இடங்களில் பொருத்தமாக இருக்கிறது. குளோசப் எனப்படும் நெருக்கக்காட்சிகளில் அவருடைய முகமும் கண்களும் உணர்ச்சிகளைக் கடத்துகின்றன.

கருபழனியப்பனின் இணையாக நடித்திருக்கும் நிகிதா நல்வரவு. ஆதரவுக்கு ஏங்கும் அநாதி கிடைத்த கொம்பைப் பற்றி ஏறும் கொடியின் உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

முக்கியவேடமொன்றில் நடித்திருக்கும் நமோ நாராயணன் நன்று.

அவருடைய மனைவியாக நடித்திருக்கும் மாயாவின் நடிப்பு அற்புதம். நாற்காலியில் ஆர்ப்பாட்டமாக அமர்ந்துகொண்டு,ஒரு பங்கு ஒரேபங்கு எனும்போதும் இறந்த கணவனின் மார்பில் அமர்ந்து ஆவேசமாக அறைவதும் பெண்ணினத்தின் வெடிப்புகள் எனக்கொள்ளலாம்.

வேலராமமூர்த்தி,செளந்திரராஜா,முருகன் உட்பட பலரும் கொடுக்கப்பட்ட வேடங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள். 

எம்.எஸ்.பிரபு மற்றும் கோபிஜெகதீஸ்வரன் ஆகியோரின் ஒளிப்பதிவு கதைக்களத்தை விரிவாகக் காட்சிப்படுத்தியிருக்கின்றன.

கே யின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை பொருத்தம்.

வேலராமமூர்த்தி பேசும் வசனங்கள் மூலம் தன் சமுதாயச் சிந்தனைகளை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சந்திராதங்கராஜ். 

ஒரு மிகப்பெரிய சமுதாயச் சிக்கலில் தொடங்கி ஒரு குழு ஒரு குடும்பம் எனத் தொடர்ந்திருக்கிறது திரைக்கதை. இந்த வரிசை தலைகீழாக மாறியிருந்தால் முக்கியமான பதிவாக அமைந்திருக்கும்.

ஒரு சரியான தொடக்கம் அடுத்தடுத்து ஒன்றையொன்று பின்னிப்பின்னி நகரும் திரைக்கதை படத்தை வேகமாக்கியிருக்கிறது.

ஒரு வாழ்க்கையை அச்சுஅசலாகப் பதிவு செய்து தான் ஒரு தவிர்க்கவியலாத இயக்குநர் என்று நிறுவியிருக்கிறார் சந்திராதங்கராஜ். 

Related Posts