ரஜினியின் காலா ரிலீஸ் தேதி – ரசிகர்கள் வருத்தம்
ரஜினி மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘காலா’.
‘காலா’ படத்தினை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், இதில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர்.
இந்தப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் புதிய படங்கள் வெளியீட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.
தற்போது வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் ‘காலா’ திரைப்படம் ஜூன் 7-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது என்று தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் வருத்தம் அடைந்திருக்கிறார்கள்.
ஏன்? ரஜினி படம் என்றால் அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் குடும்பத்தோடு பார்க்க விரும்புவார்கள்.
ஆனால் ஜூன் முதல்வாரத்தில் கோடைவிடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜூன்
1 ஆம்தேதி மற்றும் 4, 5 ஆம் தேதிகள் பள்ளிகள் திறக்கபபடவிருக்கின்றன. அந்த நேரத்தில் படம் வெளியானால் குடும்பமாகப் பார்க்க விரும்புகிறவர்கள் கூட்டம் குறையுமே என்கிற வருத்தம் ரஜினி ரசிகர்களுக்கு இருக்கிறது.
படத்தின் வசூல் பற்றிக் கவலைப் பட வேண்டியது தயாரிப்பாளர் மட்டுமே, ரசிகர்களுக்கு அந்தக் கவலை வேண்டாமே.











