October 30, 2025
விமர்சனம்

இரவின் நிழல் – திரைப்பட விமர்சனம்

பாலியல் சீண்டல்கள் பெண்குழந்தைகளுக்கு மட்டுமன்று ஆண்குழந்தைகளும் அதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைச் சொல்லி அதன் விளைவுகள் என்னென்ன? என்பதையும் உளவியல் ரீதியாக அணுகி கதை சொல்லியிருக்கிறார் பார்த்திபன்.

உலகில் முதன்முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்கிற பெருமையுடன் வெளியாகியிருக்கும் இரவின்நிழல் படத்தில் பார்த்திபன் இரவாகவும் நிழலாகவும் இருக்கிறார்.

அவருடைய சிறுவயதுக் காட்சிகள் பதறவைக்கின்றன. வளர்ந்த பிறகு மட்டுமென்ன? அவையும் படபடக்க வைக்கின்றன. 

அவர் வாழ்க்கையில் வருகிற பிரியங்காரூத், பிரிகிடாசாகா, வரலட்சுமிசரத்குமார், மூன்று பெண்கள் அவருடைய நிலையை மாற்றுகிறார்கள். ஆனால் மனம் அப்படியேதான் இருக்கிறது. மூவருமே பார்த்திபனுக்கு இணையாக நடித்திருக்கிறார்கள்.

சாமியாராக நடித்திருக்கும் ரோபோசங்கர் உள்ளிட்ட பிற நடிகர்களும் தேவைக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரகுமான் படத்தின் கதை வெளிப்படுத்தும் உணர்வுகளை இசையால் மெருகேற்றியிருக்கிறார். அவரே தேடி இசையமைத்திருக்கும் சித்தர் பாடலான 

பாபஞ்செய் யாதிரு மனமே – நாளைக்
கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

பாடல் மனதை உருக்குகிறது.

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ.வில்சனுக்கு ஏராளமான வேலைகள். அவற்றைச் சிரத்தையுடன் செய்து படத்தைப் போரடிக்காமல் நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறார்.

விஜய்முருகனின் கலைஇயக்கம் சிறப்பு. எந்தக்குறையும் தெரியாமல் எல்லா இடங்களையும் நகலெடுத்திருக்கிறார்.

முதன்முறையாக தாளிலேயே அதாவது எழுதும்போதே படத்தொகுப்பு செய்திருக்கிறார் பார்த்திபன். இதை எல்லா இயக்குநர்களும் கடைபிடித்தால் தோல்விப்படமே இருக்காது என்பது உறுதி.

எழுதி இயக்கி நடித்திருக்கும் பார்த்திபன், கால்சட்டையைக் கழற்றிவிட்டுக் கம்பால் அடிக்கும் காட்சிகள், கஞ்சா விற்கும் இடமெனக் காட்டும் காட்சிகள், இரத்தமும் சதையுமாக ஈழத்தில் நடந்த தமிழினப்படுகொலைக்காட்சி போல் இறந்தவரின் மார்பில் பால் தேடும் குழந்தை மற்றும் சில கெட்ட வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம்.

தொடக்கத்தில் ஓர் ஆண், அதைத் தொடர்ந்து மூன்று பெண்களால் உருமாறிக்கொண்டே இருக்கும் பார்த்திபன் ஒரு பெண்குழந்தையால் மனம் மாறி மாய்கிறார். 

நல்ல கருத்தைப் புதிய தொழில்நுட்பத்தில் சொல்லும் பார்த்திபனின் வேட்கை பார்வையாளர்களையும் ஆட்படுத்தும்.
 

Related Posts