December 5, 2025
விமர்சனம்

ஐபிஎல் – திரைப்பட விமர்சனம்

ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பது முன்னோர் மொழி.ஆனால் நடைமுறை அப்படியில்லை.பல நிரபராதிகள் தண்டிக்கப்படுவது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.அப்படியொரு நிகழ்வை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் படம் ஐபிஎல். இந்தியன் பீனல் லா என்கிற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம்தான் இந்த ஐபிஎல்.

குற்றம் செய்யாத கிஷோர் மீது ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, அவ்ருக்கு எதிராக சாட்சியங்கள் மற்றும் சான்றுகள் சமர்க்கப்பிட்டு குற்றவாளியாக்கப்படுகிறார்.

கிஷோருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க அதிகார வர்க்கம் முயலும் நேரத்தில் அவரது தங்கையின் காதலரான டி.டி.எஃப்.வாசன்,அவரைக் காப்பாற்ற முயல்கிறார்.

யாருடைய முயற்சி வெற்றி பெற்றது? கிஷோரை குற்றவாளியக்க முயல்பவர்கள் யார்? எதற்காக? ஆகிய கேள்விகளுக்கான விடைகள்தாம் படம்.

நடிகராக அறிமுகமாகியிருக்கும் டி.டி.எஃப்.வாசன்,ஏனோ தானோவென இல்லாமல் நடிப்பற்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறார்.அவருடைய தனித்துவமான (பைக்) துள்ளுந்து ஓட்டம் படத்தில் இருக்கிறது.அது அவருடைய இரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது.

செய்யாத குற்றத்திற்காகக் காவல் நிலையத்தில் கொடுமைகள் அனுபவிக்கும் வேடத்தில் நடித்திருக்கும் கிஷோர்,அவருடைய தேர்ந்த நடிப்பு மூலம் அந்தக் கதாபாத்திரத்துக்கு உரமூட்டியிருக்கிறார்.

காவல்துறை உயரதிகாரியாக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி,கொடுமைக்கார அதிகாரி வேடத்துக்குக் கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். மற்றொரு காவல்துறை உயரதிகாரியாக நடித்திருக்கும் திலீபன்,காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் ஜான் விஜய் ஆகியோரும் வேடத்துக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.

கிஷோரின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி, முதலமைச்சர் வேடத்தில் நடித்திருக்கும் நரேன், போஸ் வெங்கட் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் குறைவின்றி தங்களது பணியைச் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எஸ்.பிச்சமணி, படம் வண்ணமயமாக இருக்க வேண்டும் என்று பணியாற்றியிருக்கிறார்.டிடிஎஃப்.வாசனின் சிறப்பான துள்ளுந்து ஓட்டக் காட்சிகளை சிரமேற்கொண்டு படமாக்கியிருக்கிறார்.

அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம். பின்னணி இசையில் தாழ்வில்லை.

படத்தொகுப்பாளர் பிரகாஷ்மாப்புவின் உழைப்பில் படம் இயல்பாகப் பயணிக்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் கருணாநிதி. உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் கதையை எழுதியிருக்கும் அவர், வெகுமக்கள் இரசனைக்கேற்ற மாதிரி திரைக்கதை மற்றும் காட்சிகள் அமைத்திருக்கிறார்.அது அவருக்கும் நடிகராக அறிமுகமாகியிருக்கும் டிடிஎஃப்.வாசனுக்கும் பலமாக அமைந்திருக்கிறது.

– இளையவன்

Related Posts