ஃப்ரைடே – திரைப்பட விமர்சனம்
ரவுடிகள் தாதாக்கள் என்று நாம் ஒதுங்கிப் போகிறவர்களின் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிற படமாக வந்திருக்கிறது ஃப்ரைடே.
நாயகன் அனிஷ் மாசிலாமணி, மைம்கோபி,கேபிஒய் தீனா ஆகியோர் ரவுடிகள்.இவர்களில் அனிஷ் மாசிலாமணியைக் கொலை செய்ய ஒரு கூட்டம் திட்டமிடுகிறது.அதற்கு அவருடன் இருக்கும் ஒருவரும் உடந்தையாக இருக்கிறார்.அது ஏன்? எதனால்? அதன் முடிவென்ன? என்கிற கேள்விகளுக்கான விடையாக விரிந்திருக்கிறது படம்.
அனிஷ் மாசிலாமணி, ரவுடி கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருக்கும்படி தன்னை மாற்றிக் கொண்டிருப்பது தெரிகிறது.இந்த வேடத்துக்குக் கோபம் ஆக்ரோசம் போன்றவற்றை வெளிப்படுத்தினால் போதுமென்றில்லாமல் பாசம்,தவிப்பு,அன்பு ஆகியனவற்றையும் வெளிப்படுத்த வேண்டிய வேடம்.அதை நன்றாகச் செய்திருக்கிறார்.
கேபிஒய் தீனாவுக்கு திரைக்கதையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய முக்கியமான வேடம்.அதை உணர்ந்து நடித்திருக்கிறார்.அது அவருக்கும் படத்துக்கும் பலமாக அமைந்திருக்கிறது.
மைம்கோபி இதுபோன்ற வேடங்களில் நிறைய பார்த்தாயிற்று,இந்தப்பட்த்திலும் அதுபோன்றதொரு வேடம்.வழக்கம் போல் நடித்திருக்கிறார்.
ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ராசேனன், சித்து குமரேசன் ஆகிய மற்ற நடிகர்களும் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜானி நாஷ்,திரைக்கதையில் இருக்கும் பதட்டத்தைக் காட்சிகளிலும் உணர வைக்க உழைத்திருக்கிறார்.
பாடல்களே இல்லாத படத்தில் பின்னணி இசை மூலம் தன் இருப்பை நிறுவியிருக்கிறார் இசையமைப்பாளர் டுமே.
பிரவீன்.எம் படத்தொகுப்பு மூலம் படத்தை விறுவிறுப்பாக ஓட வைத்திருக்கிறார்.
அபினாஷ் ஆதியின் சண்டைப்பயிற்சியில் சண்டைக்காட்சிகள் உண்மைக்கு மிக நெருக்கமாக அமைந்திருக்கின்றன.
கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஹரி வெங்கடேஷ்.ஏற்கெனவே பார்த்துப் பழகிய கதை மற்றும் களம் என்றாலும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு அவர்களின் மறுபக்கம் ஆகியனவற்றையும் காட்டி படத்தை வேறுபடுத்தியிருக்கிறார்.
வன்முறையை வழிமுறையாக ஏற்பவனுக்கு அதனால்தான் மரணம் என்கிற கருத்தை திரைமொழிக்குரிய இலக்கணங்களோடு சேர்த்துச் சொல்லியிருக்கிறார்.அதைவிட படத்தை விறுவிறுப்பு குறையாமல் கொண்டு சென்றிருப்பது அவருக்குப் பலம்.
– இளையவன்











