சினிமா செய்திகள்

வர்மா பட விவகாரம் – இயக்குநர் பாலா வெளியிட்டுள்ள விளக்கம்

பாலா இயக்கத்தில் விக்ரம்மகன் துருவ்விக்ரம் அறிமுகம் ஆகும் வர்மா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாரானது.

2018 டிசம்பர் மாதமே அப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்படம் குறித்து யாரும் எதிர்பாராத வகையில் ஓர் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

படத்தைத் தயாரித்திருக்கும் ஈ 4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்…..,

அர்ஜுன் ரெட்டி படத்தை வர்மா என்ற பெயரில் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தோம்.

படம் முழுமையாக முடிவடைந்த பிறகு பார்த்தால் அதில் எங்களுக்குத் திருப்தியில்லை. அதனால் படத்தை வெளியிட வேண்டாம் என முடிவு செய்துவிட்டோம்.

புதிதாக மீண்டும் படப்பிடிப்பு நடத்த உள்ளோம்.அர்ஜூன்ரெட்டி படத்தின் பெருமை குறையாத விதத்தில படமாக்கவிருக்கிறோம்.

இப்படத்தில் நடித்த துருவ் நாயகனாக நடிப்பார். இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிப்போம்.

இதனால் எங்களுக்கு நட்டம்தான், ஆனாலும் நல்ல படத்தைக் கொடுக்கவே இம்முடிவு. புதிய படத்தை ஜுன் 2019 இல் வெளியிடுவோம் என அறிவித்துள்ளனர்.

திரையுலகில் கடும் அதிர்ச்சிகளை ஏற்படுத்திய இந்த அறிவிப்பு பிப்ரவரி 7 அன்று வெளியானது.

அதற்குப் பதிலளித்து இன்று இயக்குநர் பாலா வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்…

வர்மா படத்தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவித்த தவறான தகவலால் இந்த விளக்கத்தைத் தரவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறேன்.

படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்திலிருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு.

ஜனவரி 22 ஆம் தேதியே தயாரிப்பாளர் உடன் இதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டேன்.

துருவ் விக்ரமின் எதிர்கால நலன்கருதி மேலும் பேச விரும்பவில்லை

இவ்வாறு பாலா கூறியுள்ளார்.

அந்தச் செய்திக்குறிப்புடன் தயாரிப்பாளருடன் செய்து கொண்ட ஒப்பந்தப் பத்திரத்தின் நகலையும் இணைத்துள்ளார்.

Related Posts