November 5, 2025
செய்திக் குறிப்புகள்

முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவாகும் ஹரீஷ் கல்யாண் – டீசல் பட தகவல்கள்

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் டீசல்.இந்தப் படத்தில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடித்திருக்கிறார். வில்லன்களாக வினய், விவேக் பிரசன்னா, சச்சின் கடேகர், ஷாகிர் உசேன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரமேஷ் திலக், கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்.பி சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தேவராஜுலு மார்க்கண்டேயன் மற்றும் எஸ்.பி.சங்கர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு திபு நினம் தாமஸ் இசையமைத்துள்ளார். எம்.எஸ்.பிரபு மற்றும் ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இதுவரை தமிழ்த்திரைப்படங்களில் சொல்லப்படாத கச்சா எண்ணெய் திருட்டு பற்றிய உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக வைத்துத்தான் இப்படம் உருவாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டு வரை சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வந்ததை கருவாகக் கொண்டு, ஆக்‌ஷன் கமர்ஷியல் ஜானரில் பண்டிகைக்கான கொண்டாட்டப் படமாக எடுத்திருக்கிறாராம் இயக்குநர் சண்முகம் முத்துசாமி.

தீபாவளியையொட்டி இப்படம் வெளியாகவிருக்கும் நிலையில் படம் பற்றி இயக்குநர் சண்முகம் முத்துசாமி கூறியதாவது….

இந்த சம்பவம் பற்றி எனக்குக் கிடைத்த ஒரு தகவலை வைத்து விசாரித்த போது பல தகவல்கள் கிடைத்தன.அவை அனைத்துமே அதிர்ச்சியாக இருந்தது. இது சென்னையில் மட்டும் நடக்கவில்லை. இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நடக்கும் ஒரு சிக்கல். இதனை மையமாகக் கொண்டு ஒரு படம் பண்ணலாம் என்று தோன்றியது. அதற்காகக் கேட்டதை மட்டுமே வைத்து இந்தத் திரைக்கதையை அமைக்கவில்லை, அதில் உள்ள உண்மை என்னவென்று பல மாதங்கள் ஆய்வு மேற்கொண்டு அறிந்துகொண்டு தான் இந்தத் திரைக்கதையை எழுதினேன்.

இது சாதாரண சிக்கல் அல்ல அதே சமயம் இது சர்வதேச அளவிலான ஒரு சிக்கலாகவும் இருக்கிறது, அதனால் அதில் இருந்த ஒரு பாகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதை கமர்ஷியல் படமாகக் கொடுத்திருக்கிறேன். இந்தச் சிக்கல் 2014 ஆம் ஆண்டோடு முடிந்து விட்டது. படத்தின் கதையும் அந்தக் காலக்கட்டத்தில் நடப்பதுபோலதான் இருக்கும். 2014 மற்றும் அதற்கு முந்தைய காலக்கட்டத்தில் கதை நடந்தாலும், தற்போதைய காலக்கட்டத்திலும் இந்தக் கதையோடு மக்கள் தொடர்புபடுத்திக் கொள்ளமுடியும். காரணம், டீசல் என்பது நம் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அதை வைத்து இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது என்பது அதிர்ச்சியாகவே இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாயகன் ஹரிஷ் கல்யாண் படம் குறித்துக் கூறுகையில்….

இந்தக் கதையை இயக்குநர் என்னிடம் சொன்னபோது அதிர்ச்சியாக இருந்தது, அதைவிட அதிர்ச்சி என்னிடம் சொன்னதுதான். ஒரு மாஸான ஆக்‌ஷன் படம். என்னிடம் ஏன் சொல்றீங்க என்றேன். இல்லை, நீங்கள் இதற்குப் பொருத்தமாக இருப்பீர்கள் என்றார். நானும் முழுமையான ஆக்‌ஷம் படம் பண்ணாததால் எனக்கு ஒரு பெரிய மாற்றமாக இந்தப்படம் இருக்கும் என்று நம்பினேன்.அதனால் நடிக்கச் சம்மதித்தேன்.

இப்படத்தில் நான் மீனவராக நடித்திருக்கிறேன். இதற்காக லாஞ்ச் படகு ஓட்டக் கற்றுக்கொண்டேன். அந்த படகு ஓட்டுவது என்பது சாதாரணமானது அல்ல. அதை திருப்பவே ஒன்றரை மணி நேரம் ஆகும். அந்த அளவுக்கு கஷ்டமாக இருந்தது. காட்சிகளை ரியலாக சூட் பண்ணியதால் படகு ஓட்ட வேண்டி இருந்தது. அதனால் கற்றுக்கொண்டேன். பைபர் படகும் ஓட்டியிருக்கிறேன். மீன் வலை வீசுவதற்கும் பயிற்சி எடுத்துக் கொண்டேன். இந்தப் படம் என் சினிமா பயணத்தில் முக்கியமான படமாகவும் நான் நடிக்கும் முதல் முழுமையான ஆக்‌ஷன் படமாகவும் இருக்கும்.

தீபாவளியன்று ரஜினி சார், கமல் சார் படங்களைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன், இன்று என் படம் தீபாவளியன்று வெளியாவது மகிழ்ச்சி. இது திட்டமிட்டதில்லை. நல்ல தேதியில் படத்தை வெளியிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தோம். மற்ற படங்களின் வருகை ஆகியவற்றை எல்லாம் கணக்கிட்டுப் பார்த்து தீபாவளியன்று வெளியானால் சரியாக இருக்கும் என்று தோன்றியது. அதனால் தீபாவளியன்று வெளியிடுகிறோம்

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts