மார்ச் 22 இல் தனுஷின் பக்கிரி ரிலீஸ் – விநியோகஸ்தர்கள் பட்டியல்
தனுஷ் நடித்த கேப்டன்மில்லர் படம் இரண்டு மாதங்களுக்கு முன்பு பொங்கல்நாளில் வெளியானது. அதைத் தொடர்ந்து தனுஷ் இயக்கி நடித்து தயாராகியுள்ள ராயன் படம் வெளியாகவிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படம் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனுஷ் இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் தனுஷ் படமொன்று மார்ச் 22 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
தனுஷ் நடிப்பில் ஆங்கிலம் மற்றும் ப்ரெஞ்ச் ஆகிய மொழிகளில் உருவான படம் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆப் த பகிர்’.ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கிய படம்.
இப்படம், இந்தியாவில் இருந்து பாரிஸ் செல்லும் ஒரு தெருக்கூத்துக்கலைஞரின் வாழ்க்கை பற்றிய பதிவு. இப்படத்தை 2018 ஆம் வருடம் மே மாதம் உலகம் முழுவதும் திரைக்குக் கொண்டு வந்தனர்.
அதன்பின் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இப்படம் இந்தியா முழுவதும் திரையிடப்பட்டது.தமிழில் இப்படத்துக்கு பக்கிரி எனு பெயரிட்டு வெளியிட்டனர்.
அப்போது கொரோனா சிக்கல் தொடங்கியதால் திரையரங்குகள் இயங்கவிலா நிலை ஏற்பட்டது.அதனால் இப்படம் அப்போது ஓடவில்லை.
அதனால், இந்தப்படத்தை மீண்டும் இப்போது வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். மார்ச் 22 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இப்படத்தை ஏ.பி.இண்டர்நேசனல் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.
ஏனோதானோவென்று வெளியிடாமல் முதன்முறை ஒரு புதியபடத்தை வெளியிடுவதுபோல் மிகச் சிரத்தையாக வெளியீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு முழுக்க திரையரங்குகளில் வெளியிடும் விநியோகஸ்தர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி,சிட்டி செங்கல்பட்டு ஆகிய விநியோகப்பகுதிகளில் ஏ.பி.இண்டர்நேசனல் நிறுவனமே இப்படத்தை வெளியிடுகிறது.
வட ஆற்காடு தென்னாற்காடு ஆகிய விநியோகப்பகுதிகளில் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
கோயம்புத்தூரில் இப்படத்தை சக்தி ஃபிலிம்ஸ் நிறுவனமும், மதுரையில் வசந்த் சினி ஆர்ட்ஸ் நிறுவனமும், சேலத்தில் வீகே கம்பைன்ஸ் நிறுவனமும்,திருச்சியில் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனமும், திருநெல்வேலியில் தமரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் வெளியிடவிருக்கிறார்கள்.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் சுமார் நூற்றைம்பதிலிருந்து இருநூறு திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
இப்படத்தின் உள்ளடக்கம் ஏற்கெனவே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.இப்போது முறையாகத் திட்டமிட்டு படத்தை வெளியிடும் வேலைகள் நடப்பதால் படம் நல்ல வசூலைப் பெறும் என்கிறார்கள்.











