சினிமா செய்திகள்

தனுஷ் மாரிசெல்வராஜ் கூட்டணி அறிவிப்பு – அதனால் எழும் கேள்விகள்

கர்ணன் படத்துக்குப் பிறகு தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் இணைந்து பணியாற்ற உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ‘தனுஷ் – 56’ எனச் சொல்லப்பட்டிருக்கிறது.இது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ளது ஆறாவது திரைப்படம் ஆகும்.அவர் இயக்கத்தில் இதுவரை, பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ளன. அடுத்து பைசன் வெளிவர உள்ளது.

இந்நிலையில், நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் ஏப்ரல் 9,2025 அன்று இரவு 8.40 க்கு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவில் தெரிவித்ததாவது…..

கர்ணன் படத்தின் நான்காவது ஆண்டினைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி. கர்ணன் படத்துக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. எனது அடுத்த படைப்புக்காக மீண்டும் தனுஷ் உடன் இணைவதை சொல்வதில் மகிழ்ச்சி. இது குறித்து நீண்ட நாட்களாக யோசித்துக் கொண்டிருந்தேன். இது உற்சாகம் தருகிறது.முதல் முறையாக ஐசரி கணேஷ் சார் உடன் இணைந்து பணியாற்ற உள்ளேன். இது சிறந்தவொரு அனுபவமாக இருக்கும். பெரும் யுத்தம் வேர் விடத் தொடங்கியுள்ளது

இவ்வாறு இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியானதும் திரையுலகில் ஒரு பரபரப்பு. மீண்டும் தனுஷ் மாரிசெல்வராஜ் கூட்டணி குறித்து இரண்டாண்டுகளுக்கு முன் வந்த அறிவிப்புதான் காரணம்.

இது தொடர்பாக ஏப்ரல் 9,2023 அன்று முன்னிரவு 7.30 மணிக்கு தனுஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்…

தேசிய விருது நாயகன் தனுஷ் மற்றும் தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாளி இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி, ‘கர்ணன்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறார்கள். இத்திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் (ZEE Studios) மற்றும் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் (Wunderbar Films) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும் பாராட்டுகளைக் குவித்து, வெற்றி பெற்ற ‘கர்ணன்’ திரைப்படத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இந்தப் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

நடிகர் தனுஷின் திரை வரலாற்றில், மிகப்பெரும் பொருட்செலவில், மிகப்பிரமாண்டமாக இப்படம் உருவாகவுள்ளது. மேலும் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் இப்படம் மூலம் தயாரிப்பில், இறங்குவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில், பல்வேறு பிராந்திய திரைப்படத் துறைகளைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றவுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

2023 ஏப்ரலில் தனுஷ் மாரிசெல்வராஜ் இணையும் படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இப்போது 2025 ஏப்ரலில் இந்தக் கூட்டணி அமைந்துள்ள படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால், முந்தைய அறிவிப்பு என்னவானது? ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முறிந்துவிட்டதா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

Related Posts