கார்த்தியின் தேவ் படம் பற்றி சூர்யா கருத்து – இயக்குநர் மகிழ்ச்சி
புது இயக்குநர் ரஜத்ரவிசங்கர் இயக்கத்தில், கார்த்தி,ரகுல்பிரீத்சிங் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தேவ்.
இப்படத்தின் முதல்பார்வை அக்டோபர் 25 அன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் தேவ் படம் பற்றி இயக்குநர் ரஜத் ரவிசங்கர் பகிர்ந்துகொணடவை…..
கார்த்தியின் ‘தேவ்’ கதாபாத்திரம் தோற்றம், காட்சியமைப்புகள் இவற்றைப் பார்த்த மாத்திரத்திரத்திலேயே அனைவரையும் காதலில் விழ வைக்கும் என்பதில் ஐயமில்லை.
காதல், ரொமான்ஸ் மட்டுமல்லாமல், ஒரு இளைஞன் தான் நினைப்பதைச் சாதிப்பதற்கு எந்த மாதிரியான சவால்களை எதிர்த்துப் போராடுகிறான் என்பதே கார்த்தியின் கதாபாத்திரம். இதற்கிடையில் தற்போதுள்ள இளைஞர்களுக்கு இருக்கும் சந்தோஷத்தையும் அனுபவிக்கிறார்.
ராமலிங்கம் என்ற தன் பெயரோடு தன்னுடைய அபிமான கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பெயரைச் சேர்த்து தேவ் ராமலிங்கம் என்று மாற்றிக் கொள்கிறார். அதன் சுருக்கமே தேவ்.
கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். பெயருக்கு கதாநாயகி என்றில்லாமல் கார்த்திக்கிற்கு இணையாக முக்கியத்துவம் இவருக்கு இருக்கும். பல காட்சிகளில் தனது அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். அந்தக் காட்சிகளில் எல்லாம் அனைவரின் பாராட்டையும் பெறுவார்.
மேலும் இப்படத்தில் கார்த்தியின் அப்பாவாக பிரகாஷ்ராஜும், ரகுல் ப்ரீத் சிங்கின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணனும் நடிக்கின்றனர். இவர்கள் தவிர, ‘ஸ்மைல் சேட்டை’ விக்னேஷ், அம்ருதா, வம்சி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இவர்களுடன் ‘நவரச நாயகன்’ கார்த்திக் மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் கதையை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் கூறி முடித்ததுமே என்னைக் கட்டியணைத்துக் கொண்டார். இப்படத்தில் என்னுடைய பங்கு நிச்சயம் இருக்கும் என்றார். 5 பாடல்களைக் கொண்ட ‘தேவ்’ படம் இசைக்கு விருந்தளிக்கும் விதமாகவும் இருக்கும்.
அதன்பின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜிடம் கூறியபோது அவரும் ஒப்புக் கொண்டார். இவர் சமீபத்தில் வெளியான கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்திலும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறார். காட்சிக்கேற்ப கார்த்தியை வித்தியாசமாகவும், ரசிக்கும்படியாகவும் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்வதில் வல்லவர். வேல்ராஜுக்கு கார்த்தியுடன் இணைந்து பணியாற்றுவது இது மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் முதல் தோற்றத்தைப் பார்க்கும் போதே, நாடெங்கிலும் உள்ள மூலை முடுக்கிலும் ‘தேவ்’ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இது எனக்குப் பெரிய மகிழ்ச்சியையும் அதேகேற்பப் படத்தைக் கொடுக்கவேண்டும் என்கிற உத்வேகத்தையும் கொடுத்துள்ளது என்கிறார் ரஜத் ரவிசங்கர்.











