தாய்க்கிழவி படக்குழு மீது சங்கத்தில் புகார் – என்ன நடந்தது?
75 வயது மூதாட்டியாக நடிகை ராதிகா நடித்திருக்கும் படம் தாய்க் கிழவி.அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இந்தப் படத்தில்,ராதிகாவின் மகன்களாக சிங்கம்புலி, அருள்தாஸ்,பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.மகளாக ரேய்ச்சல் ரெபேகாவும் மருமகனாக முத்துக்குமார் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.
ஊரில் உள்ள முக்கியமான நபரான பென்னிகுயிக் என்ற கதாபாத்திரத்தில் முனீஷ்காந்த் நடித்திருக்கிறார்.இதுதவிர மற்ற முக்கிய இரண்டு கதாபாத்திரங்களில் இளவரசு மற்றும் ஜார்ஜ் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.மேலும்,உசிலம்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள நடிகர்கள் அல்லாத கிராமத்து மக்கள் பலரும் இதில் நடித்திருக்கின்றனர்.
மணிகண்டனிடம் பணிபுரிந்த விவேக் விஜயராஜ் இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.சான் லோகேஷ் படத்தொகுப்பாளராகவும், ராமு தங்கராஜ் கலை இயக்குநராகவும், நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.
இந்தப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்சன்ஸ் மற்றும் பேசன் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன.
இந்தப்படம் முதலில் பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்பின் ஒருவாரம் தள்ளி பிப்ரவரி 27 அன்று வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ஏஜிஎஸ் நிறுவனம் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பு வந்தவுடன் தாய்க்கிழவி படத்தின் தயாரிப்பாளர்கள் மீது விநியோகஸ்தர்கள் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.
என்ன புகார்?
இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை விநியோகஸ்தர் சுப்பையா பெற்றிருந்தாராம்.சுமார் பத்து கோடி என்று விலை பேசி சுமார் இரண்டு கோடி முன்பணம் கொடுத்திருந்தாராம்.
இந்நிலையில்தான்,ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு அந்தப்படத்தின் உரிமையைக் கொடுத்திருக்கிறார்கள்,நான் பேசிமுடித்த படத்தை இன்னொருவருக்கு எப்படிக் கொடுக்கமுடியும்? எனவே,இந்தப்படத்தின் விநியோக உரிமையை எனக்கே பெற்றுத்தரவேண்டும் என்று புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.
என்ன நடந்தது? என்பது குறித்து படக்குழுவினர் தரப்பில் சொல்லப்படுவதாவது…
இந்தப்படத்தை விநியோகம் செய்கிறேன் என்று பேசிவிட்டுச் சென்ற சுப்பையா,ஒரு கோடி மட்டும் முன்பண்ம் கொடுத்துவிட்டு அதன்பின் உரிய நேரத்தில் பணம் தரவில்லை. இதனால் ஒப்பந்தம் கூடப் போடவில்லை.அவர் தாமதித்த காரணத்தால் இன்னொரு தயாரிப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயன், இந்தப்படத்தின் வியாபாரப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.அவர், ஏஜிஎஸ் நிறுவனத்துக்குப் படத்தைக் கொடுப்பதென முடிவெடுத்து ஒப்பந்தம் போட்டுவிட்டார் என்று சொல்கிறார்கள்.
இதற்கு சுப்பையா தரப்பில், முதலில் ஒரு கோடி கொடுத்தோம் அதன்பின் ஒரு கோடி கொடுத்தோம்.இடையில் தயாரிப்பாளர் சுதன் மருத்துவமனையில் இருப்பதால் வந்தவுடன் பேசிக் கொள்ளலாம் என்று அவர்கள்தான் சொன்னார்கள். இப்போது திடீரென மாற்றிப் பேசுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து விநியோகஸ்தர் சங்கத்தினர் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.
என்ன முடிவு எட்டப்படும் என்பது இன்னும் ஓரிருநாட்களில் தெரிந்துவிடும்.










