கொரோனா காலத்துக்குப் பொருந்தும் கோமாளி பட சர்ச்சைக்காட்சி
ஐசரிகணேஷ் தயாரிப்பில் உருவான கோமாளி படம் 2019 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று வெளியானது. ஜெயம்ரவி, காஜல் அகர்வால்,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்த அப்படத்தை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கியிருந்தார்.
2000 ஆம் ஆண்டின் முதல்நாளில் கோமாவில் விழும் பள்ளி மாணவனுக்கு பதினாறு ஆண்டுகள் கழித்து 2016 ஆம் ஆண்டு நினைவு திரும்புகிறது என்பதுதான் அப்படத்தின் அடிப்படைக்கதை.
பதினாறு ஆண்டுகளில் நாடு எவ்வளவோ மாற்றங்களைக் கண்டிருக்கும். அது கண்டு நாயகன் ஜெயம்ரவி திகைத்து நிற்பார்.
அப்போது ஒரு காட்சியில், இது எந்த வருசம்? என்று ஜெயம்ரவி கேட்க யோகிபாபு 2019 என்பார். அப்போது தொலைக்காட்சியில் ரஜினி அரசியலுக்கு வரப்போவதாகச் செய்தி ஓடும். அதைப்பார்த்த ஜெயம்ரவி, யார ஏமாத்தப் பாக்கற? என்பார். பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினி சொல்லிக்கொண்டிருப்பதைக் கிண்டல் செய்யும் வகையில் அக்காட்சி இருந்தது.
இதனால் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டு, முன்னோட்டத்தில் இடம்பெற்ற அக்காட்சி படத்தில் இடம்பெறாமல் போனது.
இப்போது கொரோனா காலத்தில், அக்காட்சிக்கு மீண்டும் உயிர் வந்திருக்கிறது.அதை வைத்து கேலிப்படங்கள் உருவாக்கப்படுகின்றன.
அவற்றில் ஒரு படத்தில், இது 2020 ஆம் வருடம் என்று சொல்லும் யோகிபாபுவிடம், யார ஏமாத்தப் பாக்கற, டிவியில சித்தி, மெட்டி ஒலி, சக்திமான்லாம் வருது என்கிறார் ஜெயம்ரவி.
இக்காலத்துக்கு மிகப் பொருத்தமாக அமைந்த அக்கேலிப்படம் வேகமாகப் பரவி வருகிறது.
மக்கள் எல்லோருமே கோமாளிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது அப்படம் சொல்லும் மறைமுகச் செய்தி.











