September 10, 2025
விமர்சனம்

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் – விமர்சனம்

வங்கிக் கொள்ளை, ஒருவரையொருவர் ஏமாற்றுதல், சூழ்ச்சியான முறையில் பணம் சம்பாதித்தல் ஆகியன குறித்து வரும் திரைப்படங்கள் வரிசையில் சேர்ந்திருக்கும் படம் சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ்.இவற்றை வைத்துக் கொண்டு ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தைக் கொடுக்க வேண்டும் என்பதே இக்குழுவின் எண்ணம்.

ஒரு பீட்சா கடையில் வேலை பார்க்கிறார் நாயகன் வைபவ்.அந்தக் கடை முதலாளி லிவிங்ஸ்டன்.அவர் சொல்லும் ஒரு முறைகேடான வேலையைச் செய்கிறார் வைபவ்.அதில் குழப்பங்கள் ஏற்படுகின்றன.அதைச் சரிசெய்யப் போய் இன்னொரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.அது என்ன? அதிலிருந்து மீண்டார்களா? இல்லையா? என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்ல முனைந்திருக்கிறது இப்படம்.

நாயகனாக நடித்திருக்கும் வைபவ், தனது அப்பாவித்தனமான முகத்தை வைத்துக் கொண்டே அடப்பாவித் தனமான வேலைகள் செய்கிறார். அதுல்யாவினுடான காதல் காட்சிகளில் வரவேற்புப் பெறுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அதுல்யாரவி,ஆக்சன் படங்களில் நாயகிகளுக்குரிய குறைவான இடத்தையே பெற்றிருந்தாலும் அதிலும் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

வைபவ்வின் நண்பராக வரும் மணிகண்டா ராஜேஷ், கொள்ளையர்களாக நடித்திருக்கும் ஆனந்தராஜ்,ஜான்விஜய்,மொட்டை ராஜேந்திரன்,சுனில் ரெட்டி ஆகியோருடன் ரெடின் கிங்ஸ்லியும் இணைந்திருக்கிறார்.இவர்கள் அனைவரையும் வைத்துக் கொண்டு மக்களைச் சிரிக்க வைக்கவேண்டும் என்று முயன்றிருக்கிறார்கள்.

லிவிங்ஸ்டன், ஹூசைனி,பிபின்,சாம்ஸ் உள்ளிட்டோரின் வேடங்களும் அவர்களுடைய நடிப்புகளும் நன்று.

ஒளிப்பதிவு செய்திருக்கும் டிஜோடோமி, திரைக்கதையில் இருக்கும் நகைச்சுவையைக் காட்சிகளிலும் கொண்டு வர முயன்றிருக்கிறார்.பல இடங்களில் அவருடைய ஒளியமைப்பு இரசிக்க வைக்கிறது.

டி.இமானின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையிலும் கதை சொல்லும் கருத்துகளுக்கு வலுச்சேர்த்திருக்கிறார்.

படத்தைத் தொகுத்திருக்கும் சுரேஷ் ஏ.பிரசாத், எந்தக் காட்சியை விடுவது எந்தக் காட்சியைச் சேர்ப்பது என்று தடுமாறியிருக்கிறார்.

டான் அசோக்கின் சண்டைக்காட்சிகள் நாயகன் வைபவ்விற்குப் பலம்.

விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண்கேசவ் ஆகியோர் எழுதி இயக்கியிருக்கிறார்கள்.முதல்படத்திலேயே ஏராளமான அனுபவ நடிகர்களைக் கவனமாகக் கையாண்டிருக்கிறார்கள்.

நாட்டில் நடக்கும் சில அவலங்களை மக்களுக்குச் சொல்லவேண்டும் அவற்றை நகைச்சுவை முலாம் பூசிச் சொல்லவேண்டும்.அதனால் அவை கூடுதலாக மக்களிடம் போய்ச் சேரும் என்று நம்பிப் பணியாற்றியிருக்கிறார்கள்.அவர்கள் எண்ணம் ஈடேறியிருக்கிறது.

– கதிரோன்

Related Posts