பிக்பாஸ் தொடர்பாக விஜய் டிவி நடத்திய நாடகம்
நடிகை மதுமிதா இந்த ஆண்டு பிக் பாஸ் மூன்று நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அவர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆகஸ்ட் மாதம் 3 ஆவது வாரத்தில் வெளியேற்றப்பட்டார்.
வெளியே வந்ததும் தனக்குத் தர வேண்டிய சம்பள பாக்கியை டிவி நிர்வாகம் தரவில்லை என காவல்துறையில் புகாரளித்தார். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் டிவி நிர்வாகமும் தங்கள் தரப்பை விளக்கி புகாரளித்தது.
இதையடுத்து ஊடகங்களைச் சந்தித்த அவர், தான் வெளியேற்றப்பட்டதற்கு காவிரி பிரச்னை குறித்து தான் பேசியதுதான் காரணம் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து, மதுமிதாவுக்கு அளிக்க வேண்டிய மீதி சம்பளத் தொகை வழங்கப்பட்டு விட்டதாக டிவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இடையில் சில நாட்கள் அமைதியாக இருந்த மதுமிதா, நேற்று (செப்டம்பர் 9) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது….
பிக்பாஸ் நிகழ்ச்சியின் டாஸ்க் ஒன்றில் ஒவ்வொருவரும் அவரவர் கருத்தைக் கூறி வந்த நிலையில் என்னுடைய கருத்தாக, ‘வருண பகவானும் கர்நாடகத்தைச் சேர்ந்தவரோ..? மழை வடிவில் கூட தமிழகத்திற்குத் தண்ணீரைத் தர மறுக்கிறார் என்ற ஒருவரிக் கவிதையை கூறினேன்.
இதனை அரசியலாக்கி வேறு கோணத்தில் கொண்டுசென்று என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டார்கள். இதில் எங்கே அரசியல் இருக்கின்றது என்பது எனக்குப் புரியவில்லை.
நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியாத நிலைக்கு என்னை அங்கிருந்த சிலர் கொண்டு சென்றுவிட்டனர். நம் ஊரில் உள்ள பிரச்னையை பேசும்போது நம்மூரைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து என்னை கேங் ராக்கிங் செய்தார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமாக இருந்ததால் எனக்குக் கிடைத்த பரிசுதான் நான் வெளியேற்றப்பட்டது.
தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை தீர வேண்டும் என்று தினமும் கடவுளை வேண்டுவேன். அவ்வாறே எனது வேண்டுதலை கவிதை வடிவில் தெரிவித்தேன். அதில் அரசியல் எதுவும் இல்லை. பிக்பாஸ் வீட்டில் அரசியல் பேசக்கூடாது என்று எனக்கு குறிப்பு வந்தவுடன் 8 பேர் சேர்ந்து என்னைக் கேலியும் கிண்டலும் செய்தனர். அவர்களது கேலியையும் கிண்டலையும் பொறுக்க முடியாமல் தான் கையை அறுத்துக் கொண்டேன். எனக்கு ஆறுதலாக இருந்தது சேரனும் கஸ்தூரியும் தான்.
எனக்கு முன்னர் பிக்பாஸ் வீட்டில் பலர் அரசியல் பேசியுள்ளார்கள். ஏன் கமல் சாரே பிக்பாஸ் மேடையை பலமுறை அரசியலுக்கு பயன்படுத்தினார். ஆனால் அப்போதெல்லாம் அரசியல் பேசக்கூடாது என்று பிக்பாஸிடம் இருந்து குறிப்பு வரவில்லை. நான் பேசியது அரசியலே அல்ல, அவ்வாறு இருக்கும் போது எனக்கு அனுப்பிய குறிப்பை ஏன் மற்றவர்களுக்கு அனுப்பவில்லை என்பதே எனது கேள்வி.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவரும் நடிகர் கமல்ஹாசன் வீட்டிற்குள் நடப்பதை முழுமையாக தெரிந்துகொள்ளாமல் செயல்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கெதிராகவும் கமல் குறித்து குற்றச்சாட்டும் கூறிய மதுமிதாவின் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்த இடம் விஜய் தொலைக்காட்சி.
தம் நிகழ்ச்சிக்கு எதிராகப் பேசும் ஒருவரைக் கூட்டிவந்து பேட்டி கொடுக்க வைத்திருப்பதிலிருந்து நிகழ்ச்சியைப் பிரபலப்படுத்த அந்தத் தொலைக்காட்சி நடத்தும் நாடகமே இது என்பது புலனாகிறது.











