சினிமா செய்திகள்

தக்லைஃப் படத்திலிருந்து ஜெயம்ரவி விலகல் – உண்மைக்காரணம் இதுதான்

கமல்ஹாசனின் 234 ஆவது படம் தக்லைஃப். மணிரத்னம் இயக்குகிறார்.இப்படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில நாட்கள் நடந்தது.

இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு செர்பியாவில் நடக்கும் என்றார்கள்.ஆனால் கமல்ஹாசன் தேதிகள் கிடைக்காததால் தொழில்நுட்பக்குழுவினர் மட்டும் செர்பியா சென்று வெளிப்புறக்காட்சிகளைப் படம்பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

அடுத்தகட்டப் படப்பிடிப்பு நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தில் நடிப்பதாக இருந்த துல்கர்சல்மான் மற்றும் ஜெயம்ரவி ஆகியோர் படத்திலிருந்து விலகியிருக்கிறார்கள்.இருவரிடமும் வாங்கிய தேதிகளைப் பயன்படுத்தாமல் மறுபடி மறுபடி மாற்றி மாற்றித் தேதிகள் கேட்டிருக்கிறார்கள்.அவ்வாறு கேட்ட தேதிகளில் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட பட வேலைகள் இருப்பதால் தேதி தர முடியவில்லை என்பதால் இருவரும் படத்திலிருந்து விலகியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இருவருமே தேதிகள் ஒத்துவரவில்லை என்று சொன்னதில் முழு உண்மையில்லையாம்.துல்கர்சல்மான் வரிசையாகப் படங்கள் வைத்திருக்கிறார்,அதனால் அவருடைய தேதிகளில் சிக்கல் இருந்தது என்பது மட்டும்தான் உண்மை.

ஜெயம்ரவி சொன்ன காரணத்தில் உண்மை இல்லை என்கிறார்கள்.

எதனால் இப்படி?

ஜெயம்ரவி கைவசம் இப்போது பிரதர், ஜீனி,காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் இருக்கின்றன.இவற்றில் பிரதர் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது. ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.

அந்தப் படப்பிடிப்புகளையும் மீண்டும் தக்லைஃப் படப்பிடிப்பு தொடங்குவதற்குள் முடித்துவிடலாம்.அப்படியே முடிக்கவில்லையெனினும் கொஞ்சம் மாற்றி வைத்துக்கொள்ளும் வாய்ப்புள்ளவைதான் என்று சொல்கிறார்கள்.

அப்படியானால் ஏன் ஜெயம்ரவி விலகவேண்டும்?

ஜெயம்ரவிக்கும் நடிகர் சிம்புவுக்கும் மோதல் இருக்கிறதாம்.பொதுஇடத்தில் பார்த்தால் சாதாரணமாகப் பேசிக்கொள்ள முடியாத வகையில் ஒருவர் மீது ஒருவர் கோபம் கொண்டிருக்கிறார்களாம்.அப்படியிருக்கும்போது ஒரு படத்தில் சேர்ந்து நடிப்பது என்பது இயலாத காரியம்.

இந்தப்படத்தில் முதலில் சிம்புதான் நடிப்பதாக இருந்தது.அதுவரை ஜெயம்ரவி உள்ளே வரவில்லை. சிம்பு வெளியேறிவிட்டார் என்பது உறுதியான பிறகுதான் ஜெயம்ரவி ஒப்பந்தமானார்.இப்போது துல்கர் சல்மான் வெளியேறி விட்டார். மீண்டும் சிம்பு வந்துவிட்டார் என்று தெரிந்ததும் ஜெயம்ரவி விலகிக் கொண்டார். அதற்கு வெளிப்படையாகச் சொன்ன காரணம்தான் தேதிகள் ஒத்துவரவில்லை என்பது.
இவ்வாறு அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Related Posts