சினிமா செய்திகள்

கைவிட்டுப் போன மூன்று படங்கள் – அருண்விஜய் அதிர்ச்சி

நடிகர் அருண்விஜய் நடிப்பில் தற்போது மிஷன் சாப்டர் 1 என்கிற படம் தயாராக உள்ளது. இந்தப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து பாலா இயக்கும் வணங்கான் படம் இருக்கிறது. அந்தப்படம் பாதிக்கு மேல் வளர்ந்திருக்கிறது. மீதிப் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறது.

இவற்றிற்கடுத்து அருண்விஜய் நடிக்கும் படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இதுவரை இல்லை.

அதேசமயம், மூன்று படங்களில் அவர் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன.

முத்தையா இயக்கத்தில் ஒரு படம்,அடங்கமறு கார்த்திக் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் ஏ.எல்.விஜய்யின் உதவி இயக்குநர் கார்த்தி இயக்கும் ஒரு படம் ஆகிய மூன்று படங்களில் அருண்விஜய் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

இவற்றில் முத்தையா இயக்கும் படத்தை 7ஜி சிவா தயாரிக்கவிருப்பதாகவும், அடங்கமறு கார்த்தி இயக்கும் படத்தை தடம் படத்தைத் தயாரித்த இந்தர்குமார் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இப்படங்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், சுமார் ஒருவாரத்துக்குள் இம்மூன்று படங்களுமே அவர் கையை விட்டுப் போய்விட்டது என்று ஆச்சரியத் தகவல் சொல்கிறார்கள்.

அதற்குக் காரணம் அருண்விஜய் கேட்ட சம்பளம் என்றும் சொல்கிறார்கள்.

இத்தனைக்கும் ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு சம்பளம் கேட்டிருக்கிறார். இவற்றில் முத்தையா இயக்கும் படத்துக்கு மட்டும் சுமார் எட்டுகோடி சம்பளம் கேட்டாராம். மற்ற இரு படங்களுக்கு அதைவிடக் குறைவாகத்தான் கேட்டிருக்கிறார்.

ஆனாலும் ஒரேநேரத்தில் மூன்று படக்குழுவினருமே அவர் சம்பளம் அதிகம் என்று சொல்லி விலகிவிட்டார்களாம்.

இணையதள ஒளிபரப்பு உரிமை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் இந்தி உரிமை ஆகியனவற்றில் நல்ல தொகை கிடைக்கும் இக்காலத்தில் இந்தச் சம்பளம் பெரிதில்லை என்று நம்பி அருண்விஜய் கேட்டிருக்கிறார்.என்ன காரணத்தாலோ தயாரிப்பாளர்கள் பின் வாங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

அதனால், அடுத்தடுத்து புதிய படங்களின் அறிவிப்புகளை வெளியிடலாம் என்று ஆசையோடு இருந்த அருண்விஜய் கொஞ்சம் அதிர்ச்சியாகிவிட்டார் என்கிறார்கள்.

திரையுலகில் அவர் பார்க்காத ஏற்றத்தாழ்வுகளா? இதையும் கடந்து வருவார்.

Related Posts