October 30, 2025
சினிமா செய்திகள்

அந்தத் தருணத்தில் பயந்தேன் – ஆடை படவிழாவில் அமலாபால் வெளிப்படை

மேயாதமான் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்துள்ள படம் ஆடை.இப்படத்தின் முதல்பார்வை மற்றும் குறுமுன்னோட்டம் ஏற்கெனவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற விழாவில் ஆடை படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியிடப்பட்டது.

நிகழ்வில், இயக்குநர்கள் மித்ரன், ரவிக்குமார், ஸ்ரீகணேஷ்,லோகேஷ் கனகராஜ், நித்திலன், பார்த்திபன், அருண்பாண்டியன் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய அமலா பால்,

இசை வெளியீட்டு விழா வரைக்கும் இந்தப் படம் வந்திருப்பது சந்தோஷமான விஷயம். எனக்கு வந்த கதைகள் முழுவதும் பொய்யாக இருந்தது. அதனால் சினிமாவைவிட்டே விலகலாம் என்று முடிவு செய்திருந்தேன்.

அந்த நேரத்தில் தான் ஆடை கதை வந்தது. உடனே இயக்குநரைச் சந்தித்துக் கதை கேட்டேன். பிறகு இது ஏதும் இங்கிலிஷ் பட ரீமேக் இல்லையே எனக் கேட்டேன். இல்லை இது ஒரிஜினல் தான் என ரத்னகுமார் கூறினார்.

இந்தப் படம் ஆரம்பித்ததில் இருந்தே பாசிட்டிவ்வாக இருந்தது. இந்தப் படத்தில் நம்பிக்கை தான் முக்கியம். படக்குழு மீது முழு நம்பிக்கை வைத்தேன். அதன் பிறகு தான் படப்பிடிப்புக்குச் சென்றோம்.

மேயாதமான் படத்திற்கு முன்பு ரத்னகுமார் எழுதிய கதை ஆடை. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக அவர் மேயாதமான் எடுத்தார். இந்தப் படம் எனக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும். இந்தப் படத்துக்காக எந்த ஒப்பந்தமும் போடவில்லை.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பார்த்தவங்க டிரெய்லர் வந்ததுக்கு அப்புறம் ஏமாந்திருப்பாங்க. ஏனென்றால் படத்தில் ஆடையே இருக்காது என நினைத்திருப்பார்கள். டிரெய்லரை பார்த்த பிறகு இவ்வளவு காஷ்டியூமா என ஏமாந்து போயிருப்பார்கள்.

அந்தத் தருணம், அதாவது இரண்டாம் பாதியில் உள்ள ஆடையில்லாக் காட்சிகளைப் படமாக்கும் தருணம் வந்தபோது பயமாக இருந்தது. படப்பிடிப்புக்கு முன்பு கேரவனில் பயத்துடன் இருந்தேன். அப்போது மேனேஜரை அழைத்து செட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கேட்டேன். முக்கியமான 15 பேரைத் தவிர மற்ற அனைவரையும் அனுப்பிவிட்டதாகக் கூறினார்கள்.

முதல் காட்சியைப் படமாக்கிய பின், இயக்குநரிடம், பாஞ்சாலிக்கு 5 கணவர்கள் இருந்தார்கள். இங்கு 15 கணவர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னேன். அந்த அளவுக்கு இந்த டீமின் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். அந்த நம்பிக்கை இல்லாமல் இருந்திருந்தால், இந்தப் படத்தை நான் கண்டிப்பாகப் பண்ணியிருக்க மாட்டேன்.

இந்தப் படம் ஓடலைன்னா என்ன பண்ணுவீர்கள்? நீங்கள் அவ்வளவுதான், இதுபோன்ற கமெண்ட்களை பார்த்தேன். எனக்கென்ன கவலை? இதுதான் அவர்களுக்கு நான் சொல்லும் பதில், இது ஒரு நேர்மையான படம், உண்மையான படம். இந்தப் படத்தின் மூலம் கிடைத்த அனுபவங்கள் மிகவும் வலுவானது

இவ்வாறு அமலாபால் பேசினார்.

இயக்குநர் ரத்னகுமார் பேசியபோது…

இந்தப்படத்தை முதலில் செக்ஸ் படம் என்றார்கள், எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. கடைசியில் அமலாபாலின் சர்ச்சைக்குரிய படம் என்று வந்து நின்றிருக்கிறது. படம் வந்த பின் இந்த எல்லாக்கருத்துகளும் மாறும் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

இப்படம் ஜூலை 19 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

Related Posts