ஆண் தேவதை – திரைப்பட விமர்சனம்
கணவன் வேலைக்குப் போய்ப் பொருளீட்டிவர, மனைவி வீட்டுவேலைகள் செய்து குடும்பம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது நம் சமுதாயத்தின் எழுதப்படாத சட்டம்.
அதைத் தூக்கிப் போட்டுடைத்து நான் ஹவுஸ்ஹஸ்பண்ட் என்று பெருமையாகச் சொல்லும் சமுத்திரக்கனியின் கதாபாத்திரத்தைப் படைத்தமைக்காகவே இயக்குநர் தாமிராவுக்கு ஒரு பூங்கொத்து.
மனைவி டேப்லெட்டில் மேய்ந்துகொண்டிருக்க காய்கறி நறுக்கிக்கொண்டே குழந்தைகளுடன் உரையாடும் சமுத்திரக்கனி, அங்கு மட்டுமின்றி ஒவ்வொரு காட்சியிலுமே நம் நெஞ்சில் வந்து ஒட்டிக்கொள்கிறார்.
பெண்குழந்தையோடு வீட்டை விட்டு வெளியே வந்து அவர் படும் இன்னல்கள் கண்ணீர் அத்தியாயம். ஆனாலும் சுமை தெரியாமல் இருக்க கடவுளோடு கேம் என்று ஒன்றை உருவாக்கிக் கண்ணீரோடு புன்னகைக்க வைத்திருக்கிறார்கள்.
குழந்தை மோனிகா சமுத்திரக்கனியின் மகள் வேடத்துக்கு அழகாகப் பொருந்தி அழவும் வைக்கிறார் சிரிக்கவும் வைக்கிறார்.
அம்மாவிடம் இருக்கும் கவின்பூபதியும் அழகு. என்னை ஏம்ப்பா விட்டுட்டுப் போன என்று அவன் கேட்கும்போது அரங்கமே கலங்குகிறது. சுடலைமாடன் சுடலைமாடி என்று சண்டை போடும் குழந்தைகள் திரும்பச்சேரும்போது அதையே சொல்லி அணைத்துக்கொள்ளும் காட்சி சிறப்பு.
வேலைக்குப் போய் வீட்டைக்காப்பாற்றும் அம்மாவாக ரம்யாபாண்டியன். வேடத்துக்குப் பொருத்தமாக நடிக்கமுயல்கிறார். அலுவலகத்தில் ஏற்படும் சிக்கல்களால் மன உளைச்சல், தோழியின் துயரமுடிவால் ஏற்படும் கலக்கம், உயரதிகாரியின் பாலியல் சீண்டல் தொல்லை ஆகியனவற்றை அலட்டலில்லாமல் வெளிப்படுத்துகிறார்.
சுஜாவாருணியின் வேடம் இன்றைய இளம்பெண்களுக்கு நல்ல எச்சரிக்கை. பெண்களின் கெத்து இதுவல்ல என்பதை அவரை வைத்துக்கொண்டு சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
ராதாரவி, ஹரிஷ்பேரடி,இளவரசு, காளிவெங்கட், அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள். சின்னச் சின்ன வேடங்கள் என்றாலும் அவர்களின் மூலம் இந்தச் சமூகத்தின் பல்வேறு முகங்கள் வெளிப்படுகின்றன.
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் சுகம். விஜய்மில்டனின் ஒளிப்பதிவு திரைக்கதைக்குப் பலம். காசிவிஸ்வநாதனின் படத்தொகுப்பு எவ்வளவு சிக்கல் இருந்தாலும் குடும்பமாக வீட்டிலிருப்பதே பாதுகாப்பு என்பதைப் பறைசாற்றும் விதமாக அமைந்திருக்கிறது.
கடனட்டை, வங்கிக் கடனில் வீடு, தனியார் வங்கியில் மகிழுந்துக்கடன் என்று வாங்கிக் கொண்டு அதையே தம் பெருமையாகக் கருதும் மத்தியதர வர்க்கத்தின் பொட்டிலடித்துப் புத்தி சொல்லும் படம் அதைப் பிரச்சாரமாக்காமல் புத்திசாலித்தனமாகச் சொல்லியிருக்கும் படம்.
ஆண்மை, பெண்ணுரிமை, கணவன் மனைவி உறவு, குழந்தைகள் வளர்ப்பு, சமுதாயத்தின் இன்முகம் வன்முகம் ஆகிய எல்லாவற்றைப் பற்றியும் பார்வையாளர்களின் விரல்பிடித்து உரையாடியிருக்கிறார் இயக்குநர் தாமிரா.
அதற்காகவே ஆண் தேவதையை அவசியம் பார்க்கலாம்.











