சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்துக்குக் காரணம் இவைதாம் – விவரிக்கும் கட்டுரை

நிச்சயமாக என் தந்தை ஒரு பெரிய மனிதர்.சினிமாவுக்கு அவர் அளித்த நம்பமுடியாத பங்களிப்புகளுக்காக மட்டும் இதை நான்
சொல்லவில்லை. இவ்வளவு ஆண்டுகளாக அவர் சம்பாதித்த மதிப்பு, மரியாதை மற்றும் அன்பு ஆகியவற்றிற்காகவும் சொல்கிறேன். தவறான மற்றும் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. தயவுசெய்து இதுபோன்ற தவறான
தகவல்களில் ஈடுபடுவதையோ அல்லது பரப்புவதையோ தவிர்க்கவும். அவரது கண்ணியத்தையும், நம் அனைவரின் மீதும் அவர் ஏற்படுத்திய நம்பமுடியாத தாக்கத்தையும் போற்றிப் பாதுகாப்போம் – இது ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீனின்
வேண்டுகோள்

அப்பா பற்றிய வதந்திகளைப் பரப்புபவர்கள் முட்டாள்கள். அதை ஆமோதிப்பவர்கள் இழிவானவர்கள் – இது ஏ.ஆர்.ரகுமானின் மகள் ரஹீமா ரகுமானின் வேண்டுகோள்.

இப்படி ரகுமானின் பிள்ளைகள் இருவருமே ஆவேசமாகக் கூறுவதற்குக் காரணம் வேறு யாருமல்ல; அவரது மனைவியேதான்!

சென்ற வாரம் ரகுமானின் மனைவி விவாகரத்து என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப்போட, அதன் தொடர்ச்சியாக எக்ஸ் தளத்தில் ஏ.ஆர்.ரகுமானே அதை எதிர்பாராதவராக, “ஆண்டவனின் சிம்மாசனமே ஆட்டம் காணும் அளவுக்கு வேதனையான பிரிவு எங்களுக்குள்
ஏற்பட்டு விட்டது” என்று ஒப்புக் கொண்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து முந்தாநாள் ஆரம்பிக்கப்பட்ட யூடியூபர்கள் உட்பட பல மீடியாக்கள் அவர் மீது சந்தேகக்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தன.

அவர்களுக்குத்தான் ஏ ஆர் ரகுமானின் மகன் மற்றும் மகளின் வேண்டுகோள் இது!

இந்த விவாகரத்திற்குக் காரணம் இரண்டு

1. கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு.
2. இன்னொரு பெண்ணின் பெயர்.

“மோகினி டே என்பவர் பேஸ் கிடார் ஆர்ட்டிஸ்ட். இவர் பல ஆல்பங்களுக்கும், இந்திப் படங்களுக்கும், வாசித்து வருகிறார். அப்படித்தான் ரகுமான் இசைக்குழுவிலும் இருக்கிறார். மற்றபடி அவரையும் ரகுமானையும் இணைத்துப் பேசும் அளவுக்கு
அவர்களுக்குள் நெருக்கம் கிடையாது. ரகுமானின் மனைவி கேட்ட விவாகரத்து விசயத்திற்கும் மோகினிடே, தன் கணவரைப் பிரிவதாக கொடுத்த அறிக்கைக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

இரண்டுமே தனித்தனியாக,யதேச்சையாக அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள். சிண்டு முடிப்பவர்களுக்கு கிடைத்த அல்வா என்று சிரிக்கிறார் ரகுமான் குழுவைச் சேர்ந்த ஒருவர். மேலும் அவர் சொல்லும்போது, ரகுமானின் தனிமனித ஒழுக்கம் என்பது அனைவரும் ஃபாலோ செய்ய வேண்டிய ஒன்று. ஒரு பாடல் பாடுவதற்கோ அல்லது இசைக்குழுவிற்கோ வரும் பெண்கள், நாகரீகத்தை மீறி நவீன மாடல்
உடைகளில் வந்தால் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார் ரகுமான் சார். அதோடு அவர்களை தொடர்ந்து வேலைக்கும் கூப்பிட மாட்டார்.

இப்படி அவரிடம் வேலை இழந்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ரகுமான் மீது வைக்கப்பட்டிருக்கும் சந்தேகப் பார்வை முற்றிலும் தவறானது என்று ஆதங்கப்படுகிறார் அவர்.

மேடைகளிலும் பொது இடங்களிலும் ஒரு தனிமையைக் கடைப்பிடிக்கும் ரகுமான், தனிப்பட்ட முறையில் அவரது குழுக்களோடும் நெருங்கிய நண்பர்களோடும் மனம்விட்டுப் பேசி மகிழும் ஒரு மனிதராகவே இருக்கிறார். உதவி செய்வதில் அவருக்கு நிகர் அவர்தான். என் மகள் கல்லூரியில் சேர்ந்தபொழுது அவருக்கு அவசரமாக ஒரு லேப்டாப் தேவைப்பட்டது.‘எதாவது கல்வி உதவி தேவைப்பட்டால் தயங்காமல் என்னிடம் கேளுங்கள்’ என்று எப்போதோ ரகுமான் என்னிடம் சொல்லி இருந்தார். நெருக்கடியான நிலையில், அவருக்கு ஒரு மெயில் அனுப்பினேன். அன்று மாலையே அவரது மானேஜர் பேசினார். ’சார் மலேசியாவில் இருக்கிறார். அங்கிருந்து உங்களுக்கு ஒரு லேப்டாப் அனுப்பி இருக்கிறார். வந்து வாங்கிக் கொள்கிறீர்களா?’ என்று கேட்டார் என்கிறார்
ரகுமானுக்கு நெருக்கமான ஒரு பத்திரிகையாளர்.

’விவாகரத்து’ என்ற வார்த்தை ஒவ்வொரு முறை கோடம்பாக்கத்தில் உச்சரிக்கப்படும்போதெல்லாம், தமிழ்சினிமா இரசிகர்கள் அதை சீரியசாக எடுத்துக்கொள்ளாமல் அந்த வார்த்தையை ஒரு வேடிக்கையான விளையாட்டுப் பொருளாகவே எடுத்துக் கொண்டு
கடந்து போயிருக்கிறார்கள். ஆனால் ஏ ஆர் ரகுமானின் மனைவி அனுப்பிய வக்கீல் நோட்டீஸ், ரகுமானை
மட்டுமல்ல, அவரது இரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது உண்மை.

ரகுமானின் மனைவி சாய்ரா பானு சார்பில் அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கும் வந்தனா ஷா, பாலிவுட்டில் பிரபலமான வழக்கறிஞர். பல நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களின் விவாகரத்து வழக்குகளை எடுத்து நடத்தியவர்.சில வருடங்களாகவே இந்த மாதிரி பெரிய மனிதர்களின் குடும்ப வழக்குகளை நான் அதிகமாகப் பார்த்து வருகிறேன். ஆனால் இது அவர்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட விசயம். பலநாள் கோபம், ஒருநாள் இப்படி வெடித்துவிடும் என்கிறார்.

உண்மைதான். கல்யாணமான ஆரம்பத்திலிருந்தே மிகவும் பிசியாக இருக்கும் ரகுமானுக்கும் அவரது மனைவிக்கும் வழக்கமான தம்பதிகளைப் போல அடிக்கடி பல நேரங்களில் மனஸ்தாபங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் அந்த நேரங்களில் ரகுமானின் அம்மாதான், இருவரையும் சமாதானம் செய்து வைத்திருக்கிறார். குறிப்பாக தன் நெருங்கிய உறவினர்கள் அல்லது தோழிகளைப் பார்க்க கணவரிடம் நேரம் வாங்கி வைத்திருப்பாராம். ஆனால் பாடல் பதிவில் முழுக்கவனமும் செலுத்திக் கொண்டிருக்கும் ரகுமானோ
அதை முற்றிலும் மறந்து நேரம் போனதே தெரியாமல் வேலையில் மும்முரமாக இருந்திருக்கிறார். இதில் பலநேரங்களில் சாய்ரா, அவமானமும் மன வேதனையும் அடைந்திருக்கிறார். இப்போது ரகுமானின் அம்மா இல்லாததால் அந்த மனஸ்தாபம் அதிகமாகி விரிசலுக்குக் காரணமாகி இருக்கிறது.

ரகுமானின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவர் எழுத்தாளர் சாரு நிவேதிதா. அடிக்கடி ரகுமானை சந்தித்துப் பேசக் கூடியவர்.

ரகுமானை நாலைந்து வருடங்களுக்கு முன் ஒரு நாள் சந்தித்தேன். அன்றைக்கு அவருக்குப் பிறந்த நாள் என்று அங்கே போனபிறகுதான்
தெரிந்தது. தெரிந்திருந்தால் ஒரு பொக்கே வாங்கிப்போயிருப்பேன். உலகம் முழுக்க பிரசித்திபெற்ற ஒரு நபர், அந்த பிறந்த நாளில் என்னோடு மட்டுமே தனியாக நான்குமணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். மது, மாது என்கிற வார்த்தைகளையே அறியாதவர். ஒழுக்க நெறி நிறைந்தவர். அவர் மனைவியின் இந்த அவசர முடிவு,என்னையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அன்றைக்கு எனக்கும் ரகுமானுக்கும் ஒரு சந்திப்பு இருந்தது.இத்தனை சிக்கலான நேரத்திலும் ரகுமான் எனக்கு ஒரு மெசெஜ் அனுப்பி இருந்தார்.‘இன்னொரு நாள் சந்திப்போம்’ என்று. ஒரு பிரபலமானவருக்கு மனைவி என்றாலே அவருக்குத் தனிமை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகத்தான் இருந்திருக்கும். இத்தனை வருடம் பொறுத்தவர், அமைதியாகவே அதைத் தொடர்ந்திருக்கலாம் என்று தன் வருத்தத்தைப் பதிவு செய்கிறார்.

சாரு நிவேதா உட்பட ரகுமானுக்கு நெருக்கமானவர்கள் பலரும் விரும்புவது, இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான். இன்னும்
கூடத் தாமதமாகவில்லை. ரகுமானின் மனைவி சாய்ராபானு, ’என் விவாகரத்து கடிதத்தை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்’ என்று ஒரு அறிக்கை வெளியிட்டால்,அதுவே ரகுமானுக்கு மீண்டும் ஆஸ்கார் கிடைத்த மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
அவரது கோடிக்கணக்கான இரசிகர்களின் எதிர்பார்ப்பும் இதுவாகத்தான் இருக்கும்.

– கல்யாண்குமார்.

கட்டுரையாளர் சுமார் நாற்பது வருடங்களாக முன்னணி பத்திரிகைகளில் இயங்கி வரும் மூத்த பத்திரிகையாளர். ஏ ஆர் ரகுமான்,
மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறார் என்ற செய்தியை ரோஜா திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே
வெளியிட்டவர். ஏ ஆர் ரகுமானை முதன்முதலில் பேட்டி கண்டவர். அதனாலேயே இன்றைக்கும் ரகுமானோடு
நெருங்கிய தொடர்பில் இருப்பவர்.

நன்றி – குமுதம்

Related Posts