நடித்துக் காட்டச் சொல்வதா? கடுப்பான கமல்
சென்னை புறநகர் பூந்தமல்லி அருகே உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பின்போது, கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இது தொடர்பாக லைகா படத்தயாரிப்பு நிறுவனம் மீது வழக்குப் பதிவானது.
படப்பிடிப்பின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவில் இருந்தன என்பது தொடர்பாக வழக்கின் விசாரணை நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே, விபத்து குறித்து இயக்குநர் சங்கரிடமும், நடிகர் கமலிடமும் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
மார்ச் 3 அன்று நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு வேப்பேரியிலுள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் அவர் விசாரணைக்காக ஆஜரானார். விசாரணை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், விபத்து நேரத்தில் என்ன நடந்தது என விளக்கம் அளித்ததாக தெரிவித்தார். மேலும், தமிழ் சினிமா துறையில் இனி இதுபோன்ற விபத்துகள் நடப்பதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு முதல்படியாக இந்த விசாரணையை எடுத்துக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, காவல்துறை விசாரணைக்கு நடிகர் கமல்ஹாசன் முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில், சம்பவ இடத்தில் விபத்து நடந்தது குறித்து நடித்து காட்டும்படி மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து வற்புறுத்துவதாக நடிகர் கமல் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிப்பதாக நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.











