திட்டித் தீர்த்தவர்கள் திடுக்கிடும் விதமாக புதிய அறிவிப்பு – போஸ் வெங்கட் மகிழ்ச்சி
ஆணவக்கொலைகளை விமர்சித்த படம் கன்னிமாடம். நல்ல வரவேற்பைப் பெற்ற அப்படத்தின் இயக்குநர் போஸ்வெங்கட் புதியபடமொன்றை கதை எழுதி இயக்குகிறார்.
இப்படம், ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற முதுமொழிக்கேற்ப, இன்று மூன்றாம் உலகப்போர் வருமேயானால் அது நீருக்காகவே இருக்கும் என்ற கணிப்புகளைப் புறந்தள்ளி, நீருக்கும் ஊருக்கும் போருக்கும் உள்ள தொடர்புகளை, சமுதாயக் கண்ணோட்டத்தோடு, நகைச்சுவையும், சுவராஸ்யமும் கலந்து உறவுகளோடும், உணர்வுகளோடும் பிணைந்த ஒரு ஜனரஞ்சகமான கதைகளத்தைக் கொண்டிருக்கிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், ‘உரியடி’ புகழ் விஜயகுமார், பசுபதி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘வெண்ணிலா கபடிக் குழு’ ஆகிய படங்களின் கதாசிரியர் பாஸ்கர் சக்தி, இப்படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதுகிறார்.
இனியன் ஜே ஹாரிஸ் ஒளிப்பதிவில், ஜியான் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், ஹரி சாய் இசையமைக்க, பாடல்களை விவேகா எழுதுகிறார். கலைக்கு சிவசங்கர் பொறுப்பேற்க, அதிரடிக் காட்சிகளை தினேஷ் சுப்பராயன் அமைக்கிறார்.
இப்படத்தை மூவ் ஆன் பிலிம்ஸ் சார்பாக எம் பி மகேந்திரன், பி.பாலகுமார் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
அணமையில் ஒரு நிகழ்வில் பேசும்போது, கன்னிமாடம் படத்தை இயக்கியதற்காக நாள்தோறும் பல வசவுச்சொற்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்று மிகவும் வருத்தப்பட்டார் போஸ்வெங்கட்.
அவரைத் திட்டியவர்கள் திடுக்கிடும் விதமாக இப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.











