விமர்சனம்

தாராள பிரபு – திரைப்பட விமர்சனம்

குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளில் ஆண்கள் பக்கம் குறையிருந்தால் அதை நிவர்த்தி செய்து குழந்தை உண்டாக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறைகளில் ஒன்று விந்துதானம்.அதை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கும் படம்தான் தாராள பிரபு.

மிகவும் ஆழமான உணர்வுப் பூர்வமான விசயத்தை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

நாயகன் ஹரிஷ்கல்யாண், கால்பந்து விளையாட்டு வீரருக்கு உரிய துடிப்புடன் இருக்கிறார். மருத்துவராக நடித்திருக்கும் விவேக் விடாமல் அவரைத் துரத்தும் போது அதை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் காட்சிகள் மனைவியிடம் உண்மையைச் சொல்ல முடியாமல் தடுமாறும் காட்சிகள் ஆகியனவற்றில் நன்றாக நடித்திருக்கிறார். 

நாயகி தான்யாஹோப் படத்தின் பெரும் பலம். அழகாக இருக்கிறார். பொருத்தமாக நடித்திருக்கிறார். பல காட்சிகளின் கனத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார்.அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

விவேக்குக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிறப்பான வேடம். அவர் நன்றாக நடித்திருக்கிறார் என்று தனியாகச் சொல்லவேண்டியதில்லை.எந்த இடத்தில் விட்டுக் கொடுக்க வேண்டும் எந்த இடத்தில் தட்டிக் கொடுக்கவேண்டும் என்பதை வெளிப்படுத்தும் வேடம். அதை மிகச்சரியாக வெளிப்படுத்தி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.

அனுபமாகுமார், சச்சு ஆகியோர் நடிப்பு கச்சிதம். ஆர்.எஸ்.சிவாஜி வருகிற காட்சிகளில் சிரிப்பு நிச்சயம்.

அனிருத்,ஷான்ரோல்டன், விவேக் மெர்வின்,இன்னோ கென்கா,மேட்லி உள்ளிட்டோர் ஆளுக்கொரு பாடல் கொடுத்திருக்கிறார்கள்.

செல்வகுமாரின் ஒளிப்பதிவு உறுத்தாமல் இருக்கிறது.

இந்திப்படத்தின் மறு ஆக்கம் என்றாலும் சொல்லப்பட்ட கருத்துகள் விமர்சனங்களுக்கு உட்பட்டவையாக இருக்கின்றன.  

முதல்பாதியைச் சுவாரசியமாகக் கொண்டு சென்ற இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இரண்டாம் பாதியில் சறுக்கிவிட்டார்.

Related Posts