மாஃபியா – திரைப்பட விமர்சனம்
போதைப்பொருள் கடத்தல் கூட்டத்தைக் கண்டுபிடித்துக் களையெடுக்கும் காவல் அதிகாரி என்கிற ஒற்றைவரிக்கதையை உருவாக்கத்தில் வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக்நரேன்.
போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரி வேடத்தில் வருகிற அருண்விஜய், அதற்குக் கொஞ்சம் கூடுதலாகவே உழைத்திருக்கிறார். அவருடைய தோற்றமே இவர் எதையும் செய்துவிடுவார் என்று சொல்லிவிடுகிறது.இரண்டாவது தோற்றத்தை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டவும் மெனக்கெட்டிருக்கிறார்.
பெரும் தொழிலதிபராகவே வாழ்ந்திருக்கிறார் பிரசன்னா. அலட்சியப் புன்னகையுடன் கூடிய அவருடைய உடல்மொழி ரசிக்க வைக்கிறது.
பிரியாபவானிசங்கர் இந்தப்படத்தில் துப்பாக்கி பிடிக்கிறார். அதனால், கல்யாணம் பற்றிய பேச்சு வரும்போது கூட விரைப்பாகவே இருக்கிறார்.
பாலாஹசன், தலைவாசல்விஜய் உள்ளிட்டோர் கவனிக்க வைக்கிறார்கள்.
ஜேக்ஸ் பிஜாயின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை தேவையான அளவு இருக்கிறது.
கோகுல்பினோயின் ஒளிப்பதிவு படத்தை வித்தியாசமாகக் காட்ட உதவியிருக்கிறது. பல காட்சிகளின் ஒளியமைப்பு மற்றும் மென்வேகம் நன்றாக இருக்கிறது.
ஸ்ரீஜித்சாரங் படத்தைத் தொகுக்கும்போது சில காட்சிகளை முன்பின்னாக மாற்றியிருந்தால் படத்தின் வேகம் சரியாக இருந்திருக்கும்.
அருண்விஜய் பிரசன்னா ஆகிய இருவரும் மிகுந்த மகிழ்ச்சி அடையும் வண்ணம் அவர்களைக் காட்சிக்குக் காட்சி உயர்த்திப் பிடித்திருக்கிறார் இயக்குநர். நிறைய கேள்விகள் எழுமளவுக்குத் திரைக்கதையில் இருக்கும் பிழைகளைக் காட்சிகளில் சமன் செய்ய முயன்றிருக்கிறார்.
இறுதியில் வரும் திருப்பம் படத்துக்குப் பலம்.











