September 23, 2026
Uncategorized

அடவி – திரைப்பட விமர்சனம்

அடர்ந்த காடுகளை அடவி என்பார்கள். இந்தப்படமும் காடுகளைக் காக்க வேண்டும் என்பதையே பேசுகிறது. 

வனப்பகுதியைச் சுற்றுலாத் தளமாக்க வேண்டும், அதற்காக அங்கு வாழும் மலைவாழ் மக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஒரு கூட்டம் திட்டமிட, மலைவாழ் மக்கள் அதை எதிர்த்துப் போராடுவதே படம்.

நாயகனாக நடித்திருக்கும் வினோத்கிஷன், துடிப்பான இளைஞராக இருக்கிறார். மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு திமிருடன் திரிவதும் நாயகியைக் கண்டதும் மீசைக்குள் புன்னகை மலர்வதும் நன்றாக இருக்கிறது.

நாயகி அம்முஅபிராமி நல்ல தேர்வு. பாவாடை சட்டை போட்டுக்கொண்டு சுள்ளி பொறுக்கும்போது அச்சுஅசலான மலைவாழ் பெண் போல இருக்கும் அவர் சுரிதார் போட்டுக்கொண்டு கல்லூரி செல்லும்போது நவநாகரிக மங்கை போல் தோற்றமளிக்கிறார். எல்லா நேரங்களிலும் அவருடைய உதட்டோரப் புன்னகை ரசிக்க வைக்கிறது.  போராட்ட நேரங்களில் அவரிடம் தெரியும் மூர்க்கம் வியக்க வைக்கிறது.

வில்லனாக வருகிற ஆர்.என்.ஆர்.மனோகர் மற்றும் காவல் ஆய்வாளர் சாம்பசிவம் ஆகியோர் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலி வேலைக்கு மிகப்பொருத்தமாக இருக்கிறார்கள்.

மலைவாழ் மக்களாக வருகிற எல்லோருமே பொருத்தமாக நடித்திருக்கிறார்கள். சப்பை வந்துட்டா அவ மூர்க்கமா இருக்கா என்று ஒவ்வொருவரும் சொல்லும்போது பார்ப்போர் பதறுவது நிச்சயம்.

சரத்ஜடாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.பின்னணி இசையிலும் அவர் குறைவைக்கவில்லை.
தேன்மொழிதாஸின் வசனங்கள் இயற்கையின் பெருமைகளைப் பலவிதங்களில் சொல்கின்றன.

ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் ரமேஷ்ஜி. காட்சிகள் கண்களுக்கு விருந்தாகவும் கருத்துகள் செவிகளுக்கு விருந்தாகவும் அமைந்திருக்கின்றன.

மலைவாழ் மக்களின் நம்பிக்கை,ஒற்றுமை,உயிர்நேயம் ஆகியனவற்றை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

இறுதிக்காட்சியில் கோவன்பதி கிராமத்துக்கு ஏற்படும் நிலையால் மனம் வலிக்கிறது.


Related Posts