சினிமா செய்திகள்

சூர்யா சிவகார்த்திகேயன் படங்களுக்கு நெருக்கடி தரும் தெலுங்குப்படம்

ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு, சைரா நரசிம்ம ரெட்டி என்கிற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. 

சுரேந்தர் ரெட்டி இயக்கியிருக்கும் இப்படத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ளார். 

மிகப்பெரிய பொருட் செலவில் தயாராகிவரும் இப்படத்தை சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரித்துள்ளார். 

இப்படத்தில், அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசை, ரத்னவேலு ஒளிப்பதிவு, ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு, ராஜீவன் கலை இயக்கம், கமலக்கண்ணன் விஷுவல் எஃபக்ட்ஸ் என பிரமாண்டமாக உருவாகிவருகிறது,

தெலுங்கில் தயாராகும் இப்படம், தமிழ்,  மலையாளம், கன்னடம், இந்தி  மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 

இப்படம், அக்டோபர் 2 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இப்படத்தைத் தமிழில் ஆர்.பி.செளத்ரியின் சூப்பர் குட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.
 
சிரஞ்சீவி அமிதாப் போன்ற நடிகர்களோடு விஜய்சேதுபதி நயன்தாரா தமன்னா ஆகியோரும் படத்தில் இருப்பதால் நேரடித் தமிழ்ப் படம் போலவே தமிழகத்தில் வெளியிடத் திட்டமிட்டுவருகின்றனர்.

இதனால் செப்டம்பர் 20 இல் வெளியாகும் காப்பான், செப்டம்பர் 27 இல் வெளியாகவிருக்கும் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை ஆகிய படங்களுக்கு சிக்கல் ஏற்படுகிறதாம்.

ஆந்திராவில் சந்தை மதிப்புள்ள சூர்யாவுக்கு அங்கு பனிரெண்டு நாட்கள் மட்டுமே நல்ல திரையரங்குகள் கிடைக்கும்.

தமிழகத்தில் நம்ம வீட்டுப் பிள்ளை வெளியாகி ஐந்தே நாட்களில் இப்படம் வெளியாகவிருக்கிறது. 

இதனால் திரையரங்குகளைப் பகிர்வதிலும் பார்வையாளர்கள் பிரிந்து செல்லும் வாய்ப்பும் இருப்பதால் இரண்டு படக்குழுவினரும் பதட்டத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts