முத்துவிஜயன் உடலை ஊருக்குக் கொண்டு செல்ல 20 ஆயிரம் இல்லை – கவிஞர் பகிரும் சோகக்கதை
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா, மேகமாய் வந்து போகிறேன் உள்ளிட்ட பிரபலமான பாடல்களை எழுதிய பாடலாசிரியர் முத்து விஜயன் இன்று உடல்நலக் குறைவால் சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 48.
தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராக இருந்தவர் முத்து விஜயன். இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் மேகமாய் வந்து போகிறேன் பாடலை எழுதினார். ‘பெண்ணின் மனதைத் தொட்டு’ படத்தில் கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா பாடலை எழுதினார். ‘கள்வனின் காதலி’, ‘தென்னவன்’, ‘நெஞ்சினிலே’, ‘வல்லதேசம்’ உள்ளிட்ட படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளார்.
தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களுக்கு வசனங்களும் எழுதியுள்ளார். கவிஞர் தேன்மொழியைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். அதன்பின் முத்து விஜயன் பாடலாசிரியர் சங்கத்தில் தங்கி வந்தார்.
அண்மைக்காலமாக மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பாடலாசிரியர் சங்கம் மூலமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முத்து விஜயன் நேற்று (செப்டம்பர் 6) மாலை உயிரிழந்தார்.
வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் முத்து விஜயனின் உடல் தகனம் செய்யப்பட்டது. தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் முத்து விஜயன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து முத்துவிஜயனின் நண்பரும் கவிஞருமான ஆசு சுப்பிரமணியம் எழுதியுள்ள குறிப்பு….
திரைப்பட பாடலாசிரியர் முத்து விஜயன் காலமாகிவிட்டார். வருத்தமளிக்கிறது, அவரது உடல் நிலை சுகவீனமடைந்து
மரணத்தை தழுவிவிட்டார்.
கவிதை எழுதி, பிறகு திரைப்படப் பாடலாசிரியர்கள் ஆன நிறையப் பேர் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள்
கவிஞர்களில், கவிஞன், திரைக் கவிஞன் என்கிற பாகுபாடு என்பதெல்லாம் இல்லை. படைப்பு பாடல்
வடிவத்திலும் உள்ளது
திரைத்துறையில், செல்வாக்கு தான் முக்கியமாக இருக்கிறது. நடிகன், நடிகை இயக்குநர், இசைவாணன் கதையாசிரியன், தயாரிப்பாளர், பாடலாசிரியன் யாராக இருந்தாலும், செல்வாக்கை வைத்து, ஒரு படைப்பாளனைக் கொண்டாடுவது, மரியாதை கொடுப்பது, திரைத்துறையில்
மட்டுமல்ல. இலக்கியத் துறையிலும் பெருத்த அவமானமே
இன்று காலமான கவிஞன் முத்து விஜயன், அவனுக்கென்று ஒரு செல்வாக்கை உருவாக்காத காரணத்தால், உடல் நிலை மோசமாக இருந்த போது, திரைப்படப் படைப்புலகம்
கண்டு கொள்ளாதது மிகுந்த துயரமே
அவன் சாவை சொந்த ஊருக்கு ஆம்புலன்சில் கொண்டு போக ரூபாய் 20,000 தேவைப்படும் நிலையிலும், உதவ
முன்வராத திரைப்பட உலகில், அவன் உடலை சென்னையிலேயே அடக்கம் செய்தனர்.மனிதத்துவம் இழந்து நிற்கும்
திரைப்பட படைப்புலகம் செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமா?
அவன் பாடல் அவன் வாழ்வுப் போல
காற்றில் கலந்து கண்ணீராய்க் கரைகிறது
ஒரு கவிஞன் என்கிற முறையில்
ஆழ்ந்த இரங்கல் முத்து விஜயன்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.











