கழுகு 2 படத்துக்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்
கிருஷ்ணா பிந்துமாதவி உள்ளிட்ட பலர் நடிப்பில் 2012 ஆண்டு வெளியான படம் ‘கழுகு’.அப்படத்தை இயக்கிய சத்யசிவா ஏழாண்டுகளுக்குப் பிறகு ‘கழுகு-2’ படத்தை உருவாக்கியுள்ளார்.
முதல் பாகத்தில் நடித்த கிருஷ்ணா, பிந்து மாதவி ஆகிய அதே ஜோடியுடன் காளி வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தை வெளியிடும் ஸ்கிரீன்சீன் நிறுவனத்துக்கும் சேலம் பகுதி விநியோகஸ்தர்களுக்கும் இடையே உள்ள முரண் காரணமாக சேலம் பகுதியில் படம் வெளியாகாது என்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்பட்டதாம்.
இதனால் வெகுண்ட கழுகு 2 படத்தின் தயாரிப்பாளர் சிங்காரவேலன், சேலம் விநியோகஸ்தர்களிடம், உங்களுடைய முந்தைய பட கொடுக்கல் வாங்கல்களுக்காக என் படத்தின் கழுத்தில் கத்தி வைக்காதீர்கள் என்று கோபமாகப் பேசினாராம்.
இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது.
அதன்விளைவாக, சேலம் பகுதி விநியோகஸ்தர்கள் சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலனிடம் பேசினார்களாம்.
அப்போது, உங்கள் படத்துக்கு எந்தச் சிக்கலும் இருக்காது, சேலம் பகுதியில் இப்போது எடுக்கப்பட்ட புதிய முடிவின்படி 35 திரையரங்குகளில் உங்கள் படம் வெளியாகும் என்று சொன்னார்களாம்.
இதனால் நிலைமை சுமுகமாகி எல்லாப்பகுதிகளிலும் நாளை படம் வெளியாகும் என்கிறார்கள்.











