சினிமா செய்திகள்

விஜய் அஜீத்துக்குப் பின்னால் வந்து முன்னால் நிற்கும் சூர்யா

1975 ஜூலை 23 ஆண் குழந்தை பிறந்தது. ம்யிலாப்பூர் கல்யாணி நர்சிங் ஹோமில் இன்று அதிகாலை 2.51 மணிக்கு என் துணைவி ஆண் மகவைப் பெற்றெடுத்தார் – நடிகர் சிவகுமாரின் நாட்குறிப்பிலிருந்து.

சிவகுமார் குறிப்பிட்டுள்ள அந்த ஆண் மகவுதான் இன்றைய சூர்யா.

படிப்பை முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த அவரை நேருக்குநேர் படத்தில் நடிகராக்க்கினார் இயக்குநர் வசந்த்.

முதல்படத்திலேயே விஜய்யுடன் சேர்ந்து நடித்தார். சூர்யா நடித்த நான்காவது படம் பெரியண்ணா. விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய்காந்த் நடித்த அந்தப்படத்தில் இன்னொரு நாயகனாக நடித்தார் சூர்யா. இந்தப்படத்தில் இடம்பெற்ற எல்லாப்பாடல்களையும் பாடியவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

2001 இல் விஜய்யுடன் ப்ரெண்ட்ஸ் மற்றும் பாலாவின் நந்தா ஆகிய படங்கள், சூர்யாவுக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்தது. நந்தா படம் சூர்யாவின் தனித்தனமையை வெளிப்படுத்தியது.

2003 ஆம் ஆண்டு வெளியான காக்க காக்க படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய வரவேற்பைக் கொடுத்தது.

அதன்பின் கஜினி, ஆறு, வாரணம் ஆயிரம், அயன்,சிங்கம் உள்ளிட்ட நிறைய வெற்றிப் படங்கள். அதுமட்டுமின்றி, படத்துக்குப் படம் வித்தியாசமான வேடங்களை ஏற்று ரசிகர்களைக் கவர்ந்தார்.

தொடக்கத்தில் அஜீத் நடிக்க மறுத்த நந்தா,ஒரு வாரம் நடித்துவிட்டு அதன்பின் விஜய் விலகிக் கொண்ட விக்ரமனின் உன்னை நினைத்து உள்ளிட்ட படங்களில் நடித்தார்..

விஜய் அஜீத் ஆகியோர் நடிக்க மறுத்த் கதைகளில் நடித்து அவர்களுக்கு இணையாகத் தன்னை உயர்த்திக் கொண்டார் சூர்யா.

அதன்பின், நல்ல கதைகளைப் படமாக்க வேண்டும் என்பதற்காக தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார்.

அகரம் மூலம் கல்வி உதவிகளைத் தொடர்கிறார். கஜா புயல் போன்று சமுதாயச் சிக்கல்களுக்கு முதல் ஆளாக உதவி செய்கிறார்.

அண்மையில் ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கக் கூடிய புதிய கல்விக் கொள்கைக்கு சூர்யா எதிர்ப்பு தெரிவித்தார். அதன்பின் தான் அரசியல் கட்சிகளே அதில் கவனம் செலுத்தத் தொடங்கின.

நடிகர் சிவகுமாரின் மகன் என்கிற அறிமுகத்தோடு திரைத்துறைக்கு வந்தார், தன்னுடைய சிந்தனை உழைப்பு ஆகியனவற்றால் தன்னுடைய தனித்தன்மையை நிரூபித்து இன்று இளைஞர்களுக்கும் குடும்பங்களுக்கும் பிடித்த நடிகராக உருவாகி நிற்கிறார் நடிகர் சூர்யா,

திரையுலகில் முன்னணி நடிகர்களாகத் திகழும் விஜய் அஜீத் ஆகியோருக்குப் பின்னால் வந்தாலும், நல்ல படங்களைத் தயாரிக்க எண்ணும் தயாரிப்பாளர், கல்வி உள்ளிட்ட மக்கள் நலன், சமுதாய அக்கறை ஆகியனவற்றில் அவர்களை முந்தி நிற்கும் சூர்யா, இன்று தன்னுடைய 45 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

– அ.தமிழன்பன்

Related Posts