படம் நடிக்கவே பயமாக இருக்கிறது – கலங்கும் சந்தீப்கிஷன்
திருடன் போலிஸ், உள்குத்து ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக்ராஜு மூன்றாவதாக இயக்கியிருக்கும் படம் கண்ணாடி. சந்தீப்கிஷன்,அன்யா சிங், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஜூலை 1 அன்று நடைபெற்றது.
நிகழ்வில் இயக்குநர் கார்த்திக் ராஜு பேசும்போது:-
உள்குத்து படம் சரியாகப் போகவில்லை. இதுபற்றி என் நண்பர்களுடன் கலந்தாலோசிப்பேன். அப்போது தான் இந்தக் கதை உதித்தது. 3 நாட்களிலேயே எழுதி முடித்து விட்டேன். சுப்பு சாரிடம் கதையைக் கொடுத்தேன். அவர் படித்து முடித்ததும் இப்படத்தைத் தயாரிக்க ஒப்புக் கொண்டார்.
தெலுங்கிலும் கொண்டு போக வேண்டும் என்று சந்தீப் விரும்பினார். ஆனால், எனக்கு தெலுங்கில் ஒரு வார்த்தைக் கூட தெரியாது என்றேன். அதற்கு அவரே உதவிபுரிந்து தெலுங்கில் தானே தயாரிப்பதாகவும் கூறினார்.
சண்டைக் காட்சிகள் சவாலாகவே இருக்கும். சந்தீப் மற்றும் கருணாகரனின் காட்சிகள் அனைவரும் ரசிக்கும்படியாக இருக்கும். இப்படத்தில் கடினமாக உழைத்தது நாயகி அன்யா சிங் தான். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளும் தெரியவில்லையென்றாலும் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் மாற்றி மாற்றி நடித்தார்.
இப்படம் பெற்றோர்களுக்கு மிகவும் பிடிக்கும் விதமாக திடமான கருத்தைக் கூறும் படமாக இருக்கும்
என்னுடைய முதல் படமான ‘திருடன் போலீஸ்’ படத்தைப் பார்த்துவிட்டு என் அப்பா, படம் நன்றாக இருக்கிறது. ஆனால், புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறினார். ஆனால் இப்படத்தில் காட்சிக்குத் தேவைப்பட்டதால் வைத்திருக்கிறேன் என்றார்.
நாயகன் சந்தீப் கிஷன் பேசும்போது….
டீஸர் பார்த்த பலரும் நேர்மறையான கருத்துகளைக் கூறியிருந்தார்கள். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தான் படம் வெளியாகும் என்ற நிலை இருக்கிறது. நான் நடிக்க வந்து 12 வருடங்கள் ஆகின்றது. நான் எனக்காகப் படம் நடிக்கவில்லை. பார்வையாளர்களுக்காகத் தான் நடிக்கிறேன்.
ஆனால் இப்பொழுது படம் நடிப்பது என்றால் பயமாக இருக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு படமும் வெளியிடுவதற்கு பெரும் போராட வேண்டியிருக்கிறது.
இப்டத்திற்காகவும் ஒவ்வொருவரும் போராடிக் கொண்டு தான் இருக்கிறோம். தரமான படமாக வரவேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்திருக்கிறோம். இப்படம் நல்ல படமாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே இப்படத்தை எடுத்திருக்கிறோம்.
‘மாயவன்‘ படத்தை ஆன்லைனில் பார்த்த பலரும் நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள். இதன் பிறகு ‘கசடதபற’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்படம் வெளியாகும்போது எல்லோராலும் பேசும்படமாக இருக்கும்.
எல்லோரும் பேய் மற்றும் விலங்குகளை வைத்துப் படமெடுத்தால் வெற்றியாகும் என்றார்கள். ஆகையால் எந்த பின்னணியில் எடுத்தால் வெற்றியாகும் என்று கூறினாலும், அதை விடுத்து நான் எப்போதும் வித்தியாசமாகத் தான் நடிப்பேன் என்று கூறுவேன்.
இப்படத்தில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் கதையின் அடிப்படை மாறும். இந்தப்படம் 2043 வருடத்திலிருந்து ஆரம்பிக்கும். எதிர்காலத்தில் ஆரம்பித்து நிகழ்காலத்தில் முடியும்.
இதுவரை 24 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இப்படத்தைத்தான் தயாரிக்க வேண்டும் என்று தோன்றியது. இப்படத்தைப் பார்த்து முடித்ததும் இது பேய்ப் படம் என்று யாராவது கூறிவிட்டால் இனிமேல் நடிப்பதையே விட்டுவிடுகிறேன் என்றார்.










