விக்ரம் மகன் துருவ்வின் இரண்டாவது படம் முடிவானது
இயக்குநர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள தேவி 2 படம் மே 31 ஆம் தேதி வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தப்படம் சுமார் ரகப்படம் என்றும் இது தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.
இப்படத்தின் இயக்குநர் விஜய், ஒரு படம் இயக்கும்போதே இன்னொரு படத்தை ஒப்பந்தம் செய்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த தேவி 2 வெளியாகிவிட்ட பின்பும் அடுத்த படம் பற்றி எந்தத் தகவலும் இல்லை.
தகவல் வெளியே வரவில்லையே தவிர, அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டாராம் இயக்குநர் விஜய்.
நடிகர் விக்ரம் மகன் துருவ்வை நாயகனாக வைத்து அடுத்த படத்தை விஜய் இயக்கவிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
துருவ்விக்ரம் இப்போது அர்ஜூன்ரெட்டியின் மொழிமாற்றான ஆதித்யவர்மாவில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், விக்ரம் மகனுக்காக விஜய் ஒரு கதை சொன்னதாகவும் அது விக்ரமுக்குப் பிடித்துவிட்டதால் படமாக எடுக்க சம்மதம் சொல்லியிருக்கிறாராம் விக்ரம்.
இயக்குநர் விஜய் இயக்கத்தில் தெய்வத்திருமகள், தாண்டவம் ஆகிய இருபடங்களில் விக்ரம் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.











