சினிமா செய்திகள்

இந்தித்திணிப்பு விவகாரம் – உடனே கருத்து சொன்ன ஏ.ஆர்.ரகுமான்

இந்தியாவில் புதிய கல்விக் கொள்கையை வரையறுப்பது குறித்து ஆராய டாக்டர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்து இருந்தது.

இந்தக் குழு தனது வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் மே 31 ஆம் தேதி சமர்ப்பித்தது.

அதில், மும்மொழி கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

அந்த வரைவு அறிக்கை குறித்து பொதுமக்கள் ஜூன் 30 ஆம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் பரிந்துரை, தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பை உருவாக்கி இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இருமொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது. மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி மொழியைத் திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த நிலையில், திருத்தப்பட்ட வரைவு கல்விக்கொள்கை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயம் பயில வேண்டும் என்பது நீக்கப்பட்டுள்ளது. விருப்பத்தின் அடிப்படையில் 3 ஆவது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் 3 ஆவது மொழியாக இந்தி மொழி பயில வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட ஏதேனும் ஒரு மொழியை தேர்வு செய்து படிக்கலாம்.

இத்தகவல் வெளியான சிறிது நேரத்திலேயே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில், அழகிய தீர்வு ??? ”தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல… திருத்தப்பட்டது வரைவு!”

என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு ஏராளமானோர் வரவேற்புத் தெரிவித்துவருகின்றனர்.

Related Posts