விமர்சனம்

எம்பிரான் – திரைப்பட விமர்சனம்

நாயகன் ரெஜித்மேனன் இளம் மருத்துவர். அவருக்கு தூக்கத்தில் ஒரே மாதிரியான கனவு தினமும் வருகிறது. அந்தக்கனவில் அவருக்குச் சற்றும் தொடர்பில்லாத ஒரு பெண் பின் தொடர்கிறார். அதைத் தொடர்ந்து பல நிகழ்வுகள் கனவாகவே வருகின்றன. அதனால் தூங்கமுடியாமல் தவிக்கிறார்.

அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார்? என்பதுதான் கதை. திகில் படத்துக்குரிய கதை என்றாலும் அதை அழகிய காதல்கதையாகச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணபாண்டி.

இளம் மருத்துவர் பிரியனாக நடித்திருக்கும் ரெஜித்மேனன். வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். நடிப்பில் இன்னும் முன்னேற வேண்டும்.

நாயகி ராதிகாபிரீத்தி அழகிய வரவு. அவருடைய கண்களும் அப்பாவித்தனமான முகமும் பேச்சும் சிறப்பு. அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

நாயகியின் தாத்தாவாக நடித்திருக்கும் மெளலி படத்துக்குப் பெரும்பலம். அவருடைய வேடமும் நடிப்பும் பொருத்தம்.

நாயகனின் அம்மாவாக வருகிற கல்யாணிநடராஜன் கவனம் ஈர்க்கிறார்.

பிரசன்னா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் உள்ள திரைக்கதை. அத்ற்கு நியாயமாக உழைத்திருக்கிறார் பிரசன்னா.

புகழேந்தியின் ஒளிப்பதிவில் காட்சிகள் நன்று. இவருடைய புண்ணியத்தால் கூடுதல் அழகாகத் தெரிகிறார் நாயகி.

நாயகியின் பின்னால் சுற்றும் நாயகன் என்று ஒராயிரம் கதைகள் பார்த்துவிட்டோம். இந்தப்படத்தில் அதற்கு நேரெதிராக நாயகனின் பின்னால் சுற்றும் நாயகி என்று வைத்திருக்கிறார் இயக்குநர்.

அதுவே சுவாரசியம் எனும்போது அதற்கடுத்து நாயகனின் முழுமையான பராமரிப்பில் நாயகி என்று மாறுவது சோகம் என்றாலும் அழகு.

காதல் கதைக்குப் பின்புலமாக கனவு, ஆத்மா என மாற்றி யோசித்த இயக்குநர் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி வேகத்தையும் கூட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

Related Posts