விமர்சனம்

திருமணம் – திரைப்பட விமர்சனம்

படித்து முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகி காவ்யாசுரேஷ். வருமானவரித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றும் அண்ணன், வாடகைகார் நிறுவனம் நடத்தும் மாமா, வீட்டோடு இருக்கும் அம்மா ஆகிய அன்பான குடும்பத்தைக் கொண்டவர்,

வானொலியொன்றில் அறிவிப்பாளராகப் பணியாற்றும் நாயகன் உமாபதி. அக்கா மற்றும் சித்தப்பாவைக் கொண்ட சிறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறிய குடும்பம் என்றாலும் ஜமீன் குடும்பம்.

காவ்யாவும் உமாபதியும் காதலர்கள் என்றாலும் என் வீட்டார் சம்மத்தித்தால் மட்டுமே திருமணம் என்று நாயகி உறுதியாகச் சொல்லிவிடுகிறார். அதனால் இருவீட்டாரால் ஏற்பாடு செய்யப்படுகிறது.

அப்போது நடக்கும் நிகழ்வுகள்தாம் படம்.

நாயகனாக நடித்திருக்கும் உமாபதியும் நாயகி காவ்யாவும் தங்கள் வேடத்தைப் புரிந்து அழகாக நடித்திருக்கிறார்கள். உமாபதியின் நடனத்திறமையை வெளிப்படுத்த ஒரு பாடல், நாயகியின் நாட்டியத் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு என்று அவர்களைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

நாயகியின் அண்ணன் அறிவுடைநம்பி என்கிற வேடத்தில் சேரன் நடித்திருக்கிறார். நேர்மையான அதிகாரி என்கிற வேடத்துக்கேற்ப மிடுக்குடன் நடக்கிறார். கறாராக இருக்கிறார். அளவாகப் பேசுகிறார்.

மாப்பிள்ளை பார்க்கப்போன இடத்தில், வருடம் ஒரு கோடிக்கு மேல் சம்பாத்தித்துக்கொண்டு வருமானவரி கட்டாமல் அரசை ஏமாற்றுகிறீர்களா? என்று கேட்டு மாப்பிள்ளை வீட்டாரைக் கலங்கடிக்கிறார். அந்தக் காட்சியில் சிரிப்பால் அதிர்கிறது திரையரங்கம்.

நாயகனின் அக்காவாக சுகன்யா. கல்யாணம்கிறது ஜென்மத்துல ஒருமுறை நடக்கறது, அதை ஊரே மூக்கு மேல் விரல் வைக்கிற மாதிரி ஜாம் ஜாம்னு நடத்தணும் என்கிற பெரும்பான்மையோரின் மனப்பாங்குடைய பெண்.

வேடத்துக்கு மிகப்பொருத்தமாக நடித்திருக்கிறார் சுகன்யா.அவருடைய எண்ணத்துக்கு எதிராக சேரன் பேசும்போதெல்லாம் கண்களாலேயே கோபிக்கிறார்.

நாயகி வீட்டில் மாமாவாக தம்பிராமையா, நாயகன் வீட்டில் சித்தப்பாவாக எம்.எஸ்.பாஸ்கர். திருமண நிகழ்வுகளையும் படத்தையும் நகர்த்திப்போக உதவியிருக்கிறார்கள்.

நகைச்சுவைக்கு பால சரவணன்.பல இடங்களில் சிரிக்கவைத்தாலும் கார் கண்ணாடியை உடைத்துவிட்டு அவர் பம்முகிற காட்சி சிறப்பு.

சேரனின் அம்மாவாக நடித்திருக்கும் சீமா ஜி நாயரும் ஒரு காட்சியில் மட்டும் வருகிற அனுபமாகுமாரும் கவனிக்க வைக்கிறார்கள்.

இந்தப்படம் மூலம் சேரன் சொல்லியிருக்கும் கருத்துக்கு வலுச்சேர்க்கும் கதாபாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ். நன்றாக நடித்து கலங்க வைக்கிறார்.

சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் தாழ்வில்லை.

ராஜேஷ்யாதவின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரும் பலம். நகரத்துக்குள்ளேயே நடக்கும் கதை என்றாலும் சின்னதொரு வாய்ப்பு கிடைத்து கிராமத்துக்குப் பக்கம் போனதும் அவருடைய கண்களுக்குச் சிறகு முளைக்கிறது, காட்சிகள் அழகோ அழகு.

திருமணம் என்பதை ஒருநாள் கொண்டாட்டமாக மட்டும் பார்க்காமல் அதன்பின் விரியும் மொத்த வாழ்க்கைக்கும் சேர்த்து யோசித்து சேரன் எடுக்கும் முடிவு சிறப்பானது.

அதை விரலுயர்த்தி வேகமாகச் சொல்லாமல் ஓர் உளவியல் மருத்துவரின் பக்குவத்துடன் அரவணைத்துச் சொல்லியிருக்கிறார்.

குடும்பங்கள் கொண்டாடக்கூடிய கொண்டாட வேண்டிய படம்.

Related Posts