பேட்ட விஸ்வாசம் படங்களில் அதிக வசூல் எதற்கு? திரையரங்குக்காரர் அறிவிப்பால் சர்ச்சை
சனவரி 10,2019 அன்று ரஜினி நடித்த பேட்ட மற்றும் அஜீத் நடித்த விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியாகின.
வெளியான நாள் முதல் இவ்விரு படங்களுக்கிடையே எந்தப்படம் அதிக வசூல் செய்தது? என்கிற விவாதங்கள் காரசாரமாக நடந்துவந்தன.
பேட்ட 100 கோடி வசூல் செய்யும் என்று அந்தப்படத் தயாரிப்பு நிறுவனம் சொன்னது. உடனே விஸ்வாசம் 125 கோடி வசூல் செய்யும் என்று அந்தப்படத்தை வெளியிட்ட நிறுவனம் சொன்னது.
இதனால் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் நேரடி மோதலில் ஈடுபடும் சூழல் உருவானது. சமூக வலைதளங்களில் மோதல் அதிகரித்தது.
இந்நிலையில், சனவரி 30 அன்று நடந்த மிகமிக அவசரம் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பேசிய திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த திருச்சி ஸ்ரீதர், பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களில் விஸ்வாசம் படம்தான் அதிக வசூல் செய்திருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை பேட்ட படத்தை விட விஸ்வாசம் பத்து கோடி ரூபாய் அதிகம் வசூல் செய்யும். இதுதான் உண்மை.
இவ்வாறு அவர் பேசினார்.
வெளிப்படையாக, ரஜினியைவிட அஜீத் அதிகம் வசூல் செய்தார் என்று அவர் சொல்லியிருப்பதால் மீண்டும் சர்ச்சை உருவாகியுள்ளது.











